ஈரோடு, நவ.19: சென்னிமலை ஒன்றியம், சிறுகளஞ்சி ஊராட்சி, ஸ்ரீசக்தி நகர் பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட திரளான கிராம மக்கள், குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதியில் 60 குடும்பங்களைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் வசிக்கிறோம். கடந்த, 2 ஆண்டுகளுக்கு மேலாக எங்களுக்கு கூட்டுக்குடிநீர் திட்ட பயன் கிடைக்கவில்லை. உள்ளாட்சி அமைப்பு சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து கொடுத்ததால், இதுவரை அந்த நீரை பயன்படுத்தினோம்.
சமீபமாக நிலத்தடி நீர் வற்றியதால், ஆழ்துளை கிணற்றிலும் தண்ணீர் இல்லை. கடந்த 10 நாட்களாக லாரி மூலம் தண்ணீர் வாங்கி பயன்படுத்துகிறோம். தொடர்ந்து தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலையில் எங்கள் பொருளாதாரச் சூழ்நிலை இல்லை. தற்போது சென்னிமலை கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் நடப்பதால், அப்பணி முடிந்ததும் தண்ணீர் தருவதாக கூறுகின்றனர்.
தவிர, எங்கள் பகுதியில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி கட்டும் பணியும் நடக்கிறது. இத்திட்டம் முடிந்து எங்களுக்கு தண்ணீர் வழங்கும் வரை, மாற்று திட்டம் மூலமாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post குடிநீர் வசதி செய்து தர கோரி மனு appeared first on Dinakaran.