×
Saravana Stores

ஆன்லைனில் ஆர்டர் செய்து வரவழைத்து ஆப்பிள் வாட்ச் திருடிய ஐடி ஊழியர் கைது: சாதுர்யமாக மடக்கி பிடித்த டெலிவரி ஊழியர்

வளசரவாக்கம்: கொரட்டூர் பகுதியை சேர்ந்தவர் புனேஷ் (22). ஐ.டி கம்பெனியில் வேலை செய்து வரும் இவர், கடந்த சில நாட்களுக்கு முன் ஆன்லைனில் ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள ஆப்பிள் வாட்ச் ஆர்டர் செய்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன், இதை டெலிவரி செய்வதற்கு கருணாகரன் (36) என்பவர் புனேஷை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது புனேஷ், அண்ணாநகர் வரும்படி கருணாகரனை அழைத்துள்ளார். அதன்படி வந்த கருணாகரன், பார்சலை கொடுத்துள்ளார்.

அப்போது, அவர் முன்னிலையில் புனேஷ் அந்த பார்சலை பிரித்து, அதில் தான் ஆர்டர் செய்த வாட்ச் சரியாக உள்ளதாக என பார்த்துள்ளார். அந்த நேரத்தில் கருணாகரனுக்கு வேறொரு அழைப்பு வந்ததால், அதில் பேசியபடி வாட்ச்சுக்கான பணம் ரூ.45 ஆயிரம் கொடுக்கும்படி கேட்டுள்ளார். அப்போது புனேஷ், வரும் அவசரத்தில் பணம் எடுத்து வர மறந்து விட்டேன். இங்கேயே சிறிது நேரம் காத்திருங்கள். அருகில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுத்து வருகிறேன்’ என்று கூறி பார்சலை அவரிடமே கொடுத்துவிட்டு சென்றார்.

ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வரவில்லை. அவரை செல்போனில் தொடர்புகொண்டும் பதிலளிக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த கருணாகரன், தான் வைத்திருந்த பார்சலை திறந்து பார்த்தபோது அதில் போலியான ஆப்பிள் வாட்ச் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த கருணாகரன், புனேஷை தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் கொரட்டூர் பகுதியில் பைக்கில் செல்வது தெரிந்தது.

உடனடியாக அண்ணாநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து, புனேஷை மடக்கி பிடித்தார். விசாரணையில், ஆப்பிள் வாட்ச் பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையால், ஆன்லைனில் ஆர்டர் செய்து, டெலிவரி ஊழியர் கவனத்தை திசைதிருப்பி ஆப்பிள் வாட்சை திருடிச் சென்றது தெரியவந்தது. அவரிடம் இருந்து ஆப்பிள் வாட்சை பறிமுதல் செய்தனர். பின்னர் புனேஷை கைது செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post ஆன்லைனில் ஆர்டர் செய்து வரவழைத்து ஆப்பிள் வாட்ச் திருடிய ஐடி ஊழியர் கைது: சாதுர்யமாக மடக்கி பிடித்த டெலிவரி ஊழியர் appeared first on Dinakaran.

Tags : Valasaravakkam ,Punesh ,Korattur ,Dinakaran ,
× RELATED வளசரவாக்கம் சாலையில் ஏற்பட்ட திடீர்...