காற்று மாசு அதிகரிப்பு டெல்லியில் பள்ளிகள் மூடல்: உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசு பெரும் சவாலாக இருந்து வருகிறது. டெல்லியில் நேற்று காற்றின் தரம் 484 புள்ளிகள் பதிவாகி ‘கடுமையான பிளஸ்’ பிரிவுக்கு சென்றுள்ளது. இதனை தொடர்ந்து, டெல்லி அரசு கிராப் 4 கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில் தலைநகரில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அமல்படுத்தக் கோரி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது ‘காற்று மாசு தடுப்பு நடவடிக்கையில், தாமதமான நடவடிக்கை எடுத்திருப்பது தொடர்பாக அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்விகளை எழுப்பினர். காற்றின் தரக் குறியீடு அபாயகட்டத்தை தொட்ட பிறகும், ஏன் காற்று தர மேம்பாட்டு செயல் திட்டமான கிராப் 4 கட்டுப்பாடுகளை அமல்படுத்த வில்லை என்று சரமாரி கேள்விகளை எழுப்பினர்.

நீதிபதிகள் மேலும் கூறுகையில், ‘காற்றின் தரம் 300 மற்றும் 400க்கு இடையில் வரும்போது, காற்றுதர மேம்பாட்டு செயல்திட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும். இதில் தாமதம் கூடாது. எனவே, காற்றின் தரம் 450க்கு கீழே சென்றாலும், நாங்கள் கிராப் 4 கட்டுப்பாடுகளை தளர்த்த அனுமதிக்க மாட்டோம். அதே போல் டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை அனைத்து பள்ளிகளையும் மூட வேண்டும். அவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தலாம்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து டெல்லிக்குள் லாரி உள்ளிட்ட கன ரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது. அத்தியாவசியமற்ற பொருட்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் தவிர இலகு ரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அனைத்து வித கட்டுமான பணிகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

 

The post காற்று மாசு அதிகரிப்பு டெல்லியில் பள்ளிகள் மூடல்: உச்ச நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: