நெய்வேலி: நெய்வேலி பகுதியில் 25 வருடங்களுக்கு முன்பு விற்பனை செய்த வீட்டை திருப்பிக்கேட்டு மிரட்டல் விடுக்கும் நிலையில் ஒருவரின் வீட்டை ெபாக்லைன் மூலம் இடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. போலீசில் புகார் செய்யப்பட்டதால் விசாரணை நடந்து வருகிறது. கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனம் பழுப்பு நிலக்கரி நிலக்கரி வெட்டி எடுப்பதற்கு நெய்வேலியை சுற்றியுள்ள பகுதி மக்களின் நிலம், வீடுகளை கையகப்படுத்தியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்எல்சி நிறுவனத்தின் சார்பில் ஆர்ச் கேட் அருகில் உள்ள இந்திராநகர் ஊராட்சி பி 1 பிளாக் மாற்று குடியிருப்பு, பி2 பிளாக் மாற்றுகுடியிருப்பு மற்றும் பெருமாத்தூர் ஊராட்சி ஏ பிளாக் மாற்று குடியிருப்பு ஆகிய பகுதிகளில் 5 மற்றும் 3 சென்ட் வீட்டு மனைகள் வழங்கப்பட்டது.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு என்எல்சி சார்பில் வழங்கப்பட்ட வீட்டுமனைகளை இடத்தின் உரிமையாளர்கள் பலர் பணம் பெற்றுக் கொண்டு வேறு நபர்களிடம் பத்திரம் மூலம் பதிவு செய்து கொடுத்துள்ளனர். அவற்றை வாங்கியவர்கள் அங்கு வீடுகள் கட்டி சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக தங்கள் குடும்பத்தினருடன் வசிக்கின்றனர். இந்நிலையில் தற்பொழுது கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் என்எல்சி இந்திய நிறுவனத்திற்கு வீடு, நிலம் வழங்கிய நபர்களுக்கு பட்டா வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு என்எல்சி நிறுவனத்திடம் இருந்து வீடு டோக்கன் பெற்றவர்கள் தற்பொழுது பட்டா வருவதை தெரிந்து கொண்டு ஏற்கனவே விற்ற நபர்களிடம் பணம் கேட்டும், இடத்தை காலி செய்து தரும்படி பிரச்னை செய்து வருவதாக தெரிகிறது.
இது சம்பந்தமாக மனை பெற்றவர்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் முதலமைச்சரின் தனிப்பிரிவு, தமிழக வருவாய்த்துறை செயலாளர், நெய்வேலி எம்எல்ஏ மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். அதில், சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி வசித்து வரும் தங்களுக்கு அனுபவத்தின் பேரில் பட்டா வழங்க வேண்டும். மனைவிற்றவர்கள் தங்கள் பெயருக்கு பட்டா வரப்போகிறது என்று தெரிந்து கொண்டும் தற்பொழுது மனையின்விலை பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் வாங்கிய நபர்களிடம் பணம் கேட்டு வருகின்றனர். இல்லை என்றால் நாங்கள் விற்ற இடத்தை எங்களிடமே திருப்பிக் கொடுத்து விடுங்கள் என்று கூறி மிரட்டுகின்றனர். இதனால் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் ஏழைகளான நாங்கள் என்ன செய்வது என்ற தெரியாமல் அச்சத்தில் இருக்கிறோம்.
குறிப்பாக மாவட்ட நிர்வாகம் இரண்டு ஊராட்சிகளின் நேரடியாக கள ஆய்வு செய்து தனி தாசில்தார் மற்றும் காவல் துறையினரின் நியமித்து மனை வாங்கி வீடு கட்டி குடியிருப்பவர் களுக்கு நேரடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாமல் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் அதிகாரிகள் இதற்கு நிரந்தர தீர்வு காணாவிட்டால் மனை வாங்கிய குடியிருப்போர் நலச்சங்கtம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
குடியிருந்த வீடு இடிப்பு: இந்திராநகர் மாற்று குடியிருப்பச் சேர்ந்த சிகாமணி கூறுகையில், என்னிடம் கடந்த 1997ம் ஐந்து சென்ட் காலி மனையை உரிமையாளர் கையெழுத்து போட்டு கொடுத்து என்னிடம் இடத்தை விற்று
விட்டார்.
எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் கிரையம் செய்து கொடுக்கிறோம் என ஒப்புதல் அளித்தனர். இந்நிலையில் நான் 25 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் நிலையில் என்னுடைய வீட்டை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடித்து தள்ளினர். இது குறித்து நெய்வேலி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். எனவே எனது வீட்டை இடித்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
The post என்எல்சி மாற்றுக்குடியிருப்பு பகுதியில் விற்பனை செய்த இடத்தை திருப்பிக்கேட்டு மிரட்டல்; பொக்லைன் மூலம் வீட்டை இடித்து தள்ளியதால் பரபரப்பு: நெய்வேலி பகுதியில் பதற்றம்- போலீசார் விசாரணை appeared first on Dinakaran.