கடலூர்: வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக மாமியார், மாமனாரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த மோவூர் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் செங்குட்டுவன்(65). இவரது மனைவி பானுமதி(60). இவர்களது மகன் கயல்வேந்தன்(35). அந்தமானில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி, புவனகிரியை அடுத்த வீரமுடையாநத்தம் விவசாயி அருள்பிரகாசம் மகள் கயல்விழி(29). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவர் அந்தமானில் வேலை செய்வதால், மாமியார் வீட்டில் கயல்விழி வசித்தார்.
இந்நிலையில் மருமகள் கயல்விழியிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டு மாமனார், மாமியார் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனை கணவரிடம் பலமுறை கூறியும் கண்டுக்கொள்ளவில்லை. இதனால் மனமுடைந்த கயல்விழி நேற்று முன்தினம் இரவு வீட்டில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், நேற்று அதிகாலை காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்த கயல்விழி பெற்றோர், உறவினர்கள் அரசு மருத்துவமனை முன் திரண்டு பெண்ணின் இறப்பிற்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும் என கூறி முற்றுகையிட்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். இது குறித்து தாய் மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் மாமனார் செங்குட்டுவன், கணவர் கயல்வேந்தன், மாமியார் பானுமதி மற்றும் இவர்களது மகள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, அதில் செங்குட்டுவன், பானுமதியை கைது செய்தனர்.
The post வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை: மாமனார், மாமியார் கைது appeared first on Dinakaran.