காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் முத்தியால்பேட்டை, இந்திரா நகரில் உள்ள முருகன் கோயிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரத்தில் இருந்து வாலாஜாபாத் செல்லும் சாலையில் உள்ள முத்தியால்பேட்டை, இந்திரா நகர் பிரதான பிரதான சாலையில் செந்தூர் முருகன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த சில நாட்களாக கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள், நவக்கிரக ஹோமம், தனபூஜைகள் நடந்தன. நேற்று வருண பூஜை, சாந்தி ஹோமம், புதிய விக்ரகங்களுக்கு கண் திறத்தல் நடந்தன.
இதைத் தொடர்ந்து, முருகன் கோயிலில் மகா பூர்ணாஹீதி தீபாராதனைக்குப் பிறகு, யாகசாலையில் இருந்து புனித நீர்க்குடங்கள் கோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூலவர் செந்தூர் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்களுடன் மகா தீபாராதனை நடந்தன. இதில் உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர், வாலாஜாபாத் ஒன்றியத் தலைவர் ஆர்.கே.தேவேந்திரன், துணை தலைவர் பி.சேகர், ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார், முத்தியால்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், துணை தலைவர் முன்னா (எ) முனீர்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைத்து பக்தர்களுக்கும் ஆலய நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
The post காஞ்சி முத்தியால்பேட்டையில் முருகன் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.