கிராம ஊராட்சி பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் உத்தரவு


சேலம்: கிராம ஊராட்சி பகுதிகளில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஊரக வளர்ச்சி இயக்குநர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. மேலும் ஒரு வாரத்திற்கு, பல்வேறு மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, கிராம ஊராட்சி பகுதிகளில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ேவண்டும் என, ஊரக வளர்ச்சி இயக்குநர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள ஏரிகள், ஆறுகள், குளம், குட்டை உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளையும் தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரும் நீர்வழிப்பாதை மற்றும் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும். நீர்வரத்து அதிகமாகி நிரம்பி வெளியேறும் உபரிநீர், குடியிருப்பு பகுதிகளுக்கு வராதபடி தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மழை பெய்தால் தண்ணீர் உடனடியாக வெளியேறும் வகையிலும், குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகாதபடியும் ஏற்பாடுகளும் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிராம ஊராட்சியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை தொடர்ந்து கண்காணிப்பதுடன், குளோரினேசன் செய்து சுகாதாரமான குடிநீரை பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். தாழ்வான மற்றும் மழைநீர் தேங்கக்கூடிய வாய்ப்புள்ள பகுதிகளை அடையாளம் கண்டு, அவ்விடங்களில் மழைநீர் தடைபடாமல் வெளியேற்ற வேண்டும். வெள்ளத்தில் சிக்கி தத்தளிக்கும் பொதுமக்களை மீட்டு தங்க வைப்பதற்கான பாதுகாப்பு மையங்களை, தயார் நிலையில் வைக்க வேண்டும். அங்கு குடிநீர், மின்விளக்கு, கழிப்பிடம் போன்ற வசதிகளை ஏற்படுத்தி வைத்திருக்க வேண்டும்.

பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே, வாய்க்கால்களில் உள்ள அடைப்புகளை நீக்கி, மழைநீர் வழிந்தோடுவதற்கான நிலையை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு நீர்நிலைகளுக்கும் தேவையான மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள் போன்றவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஏரிகள், பாசன ஏரிகள், குளம், குட்டைகள் போன்றவற்றின் கரைகளை கண்காணிக்க வேண்டும். உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நவம்பர் 1ம் தேதி நடத்த வேண்டிய சிறப்பு கிராமசபை கூட்டம், வரும் 23ம் தேதி நடத்தப்படுகிறது. இக்கூட்டத்தில், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் மேற்கொள்ள வேண்டிய வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து விவாதித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

The post கிராம ஊராட்சி பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: