அவதூறு வழக்கில் ஜாமின் கேட்டு நடிகை கஸ்தூரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல்

சென்னை: அவதூறு வழக்கில் ஜாமின் கேட்டு நடிகை கஸ்தூரி, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரி நேற்று முன்தினம் ஐதராபாத்தில் கைது செய்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நவம்பர் 29ம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க உத்தரவு அளித்தார்.

தெலுங்கு பேசும் மக்கள் மற்றும் பெண்களை குறித்து நடிகை கஸ்தூரியின் பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இது தமிழகத்தில் வசிக்கும் தெலுங்கு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தெலுங்கு மக்கள் தமிழ்நாடு முழுவதும் இழிவாக பேசிய நடிகை கஸ்தூரி மீது புகார் அளித்து வருகின்றனர்.

அதேநேரம் பல்வேறு தரப்பினரும் கஸ்தூரியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அகில இந்திய தெலுகு சம்மேளனம் மற்றும் தமிழர் முன்னேற்றப்படை நிறுவனர் தலைவர் வீரலட்சுமியும் புகார் அளித்தனர். மேலும், கோயம்பேடு காவல் நிலையத்திலும் தெலுங்கு அமைப்பு சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

நடிகை கஸ்தூரி மீது புகார்கள் குவிந்ததால் சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி நடிகை கஸ்தூரி மீது எழும்பூர் போலீசார் கடந்த வாரம் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 192, 196(1),(ஏ), 353(1)(பி) மற்றும் 353(2) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரிடம் விளக்கம் ேகட்டு விசாரணை நடத்த போலீசார் சம்மன் அனுப்பினர்.

ஆனால் போலீசாரின் கைதுக்கு பயந்து நடிகை கஸ்தூரி தனது வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டார். அதேநேரம் மதுரை திருப்பரங்குன்றம் காவல் நியைத்தில் அளித்த புகாரின் படி நடிகை கஸ்தூரி மீது 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே நடிகை கஸ்தூரி எந்த நேரத்திலும் போலீசார் கைது செய்யலாம் என அச்சத்தில் நடிகை கஸ்தூரி முன்ஜாமீன் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் நடிகை கஸ்தூரியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதைதொடர்ந்து நடிகை கஸ்தூரியை கைது செய்ய சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படையினர் கடந்த ஒருவாரமாக தீவிர தேடுதல் வேட்டையில் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள பஞ்சகுட்டா என்ற இடத்தில் பிரபல சினிமா தயாரிப்பாளர் பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான பண்ணை வீட்டை பதுங்கி இருப்பது தனிப்படையினருக்கு உறுதியான தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ஐதராபாத் சென்ற போலீசார் நடிகை கஸ்தூரியை கையும் களவுமாக கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். பின்னர் எழும்பூர் நீதிமன்ற நடுவர் ரகுபதி ராஜா முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது நடிகை கஸ்தூரியை நவ.29 வரை புழல் சிறையில் அடைக்க ஆணையிடப்பட்டது.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி ஜாமின் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு எழும்பூர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை கஸ்தூரி, எழும்பூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்ற வழக்குகளிலும்அவர் கைது செய்யப்படுவார் என கூறப்படுகிறது. மதுரை மற்றும் திருச்சியில் கஸ்தூரி 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் அடுத்தடுத்து கஸ்தூரி கைது செய்ய வாய்ப்புள்ள நிலையில் தற்ப்போது கைது செய்யப்பட்டுள்ள வழக்கில் இருந்து ஜாமின் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

The post அவதூறு வழக்கில் ஜாமின் கேட்டு நடிகை கஸ்தூரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: