×
Saravana Stores

மன சங்கடங்களை போக்கும் சங்காபிஷேக தரிசனம்!

சங்கம்

கர்நாடக மாநிலம் மைசூரை அடுத்த ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் காவேரிலோக் பவானி நதிகள் கூடும் சங்கம் என்ற இடத்தில் பெரிய மேடையில் காவேரித் தாய் தன் கிளை நதியான (தன் பெண் குழந்தையான) லோக் பவானியைத் தனது இடதுபக்கத் தொடையில் அமர்த்திக் கொண்டு, வலது காலை கீழே வைத்த நிலையில் திறந்தவெளியில் காட்சியளிக்கிறாள். தேடிவரும் பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் இவளை தரிசிப்பதற்கு காவிரியின் எதிர்க்கரையிலிருந்து படகில்தான் வர வேண்டும். இவளுக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு அதே குங்குமம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இவளை தரிசிக்கப் படகில் வரும்போது நடுவில் உள்ள மண்திட்டில், திறந்தவெளியில் ஒரு லிங்க வடிவ சிவபெருமான் காட்சியளிக்கிறார். இவருக்கு ‘வழிகாட்டி சிவன்’ என்று பெயர். படகிலிருந்தபடியே இவரையும் கட்டாயம் தரிசிக்க வேண்டும். மைசூரிலிருந்து இந்த ‘சங்கம்’ க்ஷேத்திரத்திற்கு எல்லாவித வாகன வசதிகளும் உண்டு.

சங்கு முத்திரை

திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலியிலிருந்து சுமார் 60 கி.மீ. தூரத்தில் பாபநாசம் அணை உள்ளது. அங்கிருந்து 35 கி.மீ. தூரத்தில் ‘‘அப்பர்டேம்’’ அணைக்கட்டு உள்ளது. அங்கிருந்து படகில் பயணம் செய்து வாண தீர்த்தம் என்ற புனித அருவி உள்ள இடத்தை அடையலாம். நீர்வீழ்ச்சியில் நீராடிய பின் மலைமீது ஏறி ‘‘கறுக்குமேடு’’ என்ற காட்டுப்பகுதியில் அமைந்துள்ள கல்லருவி என்ற கல்லாற்றுப் பகுதியை அடைந்தபின், செங்குத்தான மலை மீது ஏறி அங்குள்ள ‘‘சங்கு முத்திரை’’ என்ற இடத்திற்குச் சென்று காட்டுப் பாதையில் பயணித்தால், பொதிகை மலை சிகரத்தை அடையலாம். மலைவாழ் மக்கள் வழிகாட்டுதல் இல்லாமல் பயணிக்க முடியாது.

சங்குப்பேட்டை

பெரம்பலூர் நகரப் பகுதிக்குள் ‘சங்குப்பேட்டை’ என்ற பெயரில் ஒரு இடம் இருக்கிறது. இங்கு சங்குகள் வைத்து வியாபாரம் செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. தற்பொழுது பொது நிகழ்ச்சிகள் நடத்தப் பயன்படுகிறது.
சங்கு வேலி யாழ்பாணத்தில் சங்கு வேலி என்ற ஊரில் கி.பி. 1748ல் சிங்கைப் பரராசசேகரன் இரண்டாவது தமிழ் சங்கத்தை நிறுவினான். இந்த ஊர் தற்பொழுது ‘சங்குவேலி’ என்றழைக்கப்படுகிறது. ‘சங்கமான்’ கண்டி, ‘சங்கானை’ என்ற ஊர்களும் இருக்கிறது.

பலாமரத்தில் சங்கு வடிவம்

கும்பகோணம் அருகில் உள்ள திருத் தலம் திருக்கூடலூர். இங்கு வையம் காத்த பெருமாள் எனும் ஜகத்ரட்சகன் நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். இக்கோயிலின் பின் மிகப் பழமையான பலாமரம் உள்ளது. இந்த மரத்தில் பலாப்பழங்கள் நிறைய உள்ளன. பலாப் பழங்களுக்கு நடுவே மரத்தில் தானாகவே தோன்றிய சுயம்பு சங்கு வடிவம் உள்ளது. இந்த சங்கு வடிவம் ஆண்டாண்டு காலமாக நிலைத்து நிற்கிறது. இந்த சங்கு உருவத்திற்கு மஞ்சள் பூசி, விளக்கேற்றி வழிபட்டால் வாழ்வில் நோய் நொடிகளின்றி சுபிட்சமாக வாழலாம் என்ற நம்பிக்கை நிலவுகிறது. மேலும், இத்தலத்தை வழிபட்டால் பிரிந்து வாழும் தம்பதியர் மீண்டும் இணைவர் என்றும் நம்பப்படுகிறது.

மடி சங்கு

பசுவின் பாலுக்கும் சங்கிற்கும் இணைபிரியாத தொடர்பு உள்ளது. குழந்தைகளுக்குப் பசுவின் பாலை சங்கினால் முகந்து பால் புகட்டுவது வழக்கம். பின்னாளில் வெள்ளியாலும் வெண்கலத்தாலும் செய்த பாத்திரங்கள் வழக்கில் வந்தன என்றாலும், அவற்றையும் சங்கின் வடிவிலேயே அமைத்தனர். இவற்றிற்குச் சங்கு பாலாடை என்பது பெயர்.

பாலைச் சங்கில் முகந்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வர். இப்படி பாலாபிஷேகம் செய்வதற்கென்றே தோன்றிய சிறப்புமிக்க அபூர்வ சங்குகளும் உள்ளன. இவை பசுவின் மடியில் உள்ள காம்புகளைப் போன்று நீண்ட குழல் அமைப்புகளை மேற்புறத்தில் கொண்டவைகளாகும். இதில் பாலை நிறைத்து அபிஷேகம் செய்யும் போது பசுவின் மடியிலிருந்து பால் பொழிவது போலவே இருக்கும். இந்த வகை சங்குகளுக்கு மடி சங்குகள் என்பது பெயர்.

இவற்றை வழிபட்டாலும், இவற்றைக் கொண்டு தெய்வங்களுக்குப் பால் அபிஷேகம் செய்தாலும், பசுக்கள், கால்நடைகள், விவசாயம் ஆகியன பெருகும் என்கின்றனர். மேல் மருவத்தூரை அடுத்துள்ள பெரும்பேர்கண்டிகை முருகன் ஆலயத்தில் அழகிய மடி சங்கு உள்ளது.

சங்கு பிறக்கும் தலம்

பூஷா, விருத்தா எனும் இரு முனிவர்கள் முக்தியடைய வேண்டி ஈசனை நோக்கி தவமிருந்தனர். உடனடியாக முக்தி அருளும்படி பொறுமையிழந்து வேண்ட, ஈசன் அவ்விருவரையும் கழுகுகளாக மாற்றி அவர்கள் தவமிருந்த மலையை தினமும் தரிசித்து வந்தால் கலியுக முடிவில் முக்தி கிட்டும் என்று அருளியதாக தலபுராணம் கூறுகிறது. இந்த மலை திருக்கழுக்குன்றம் என்றாகியது. மலைமீது வேதகிரீஸ்வரர், மலைச் சொக்கநாயகியுடன் அருள்கிறார். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்திரன் இடி மூலம் வழிபடும் ஈசன் இவர். தாழக்கோயிலில் இறைவன் பக்தவத்சலேஸ்வரர் திரிபுரசுந்தரியுடன் அருள்கிறார். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இத்தல தீர்த்தத்தில் சங்கு தானாக பிறப்பது அற்புதம்.

The post மன சங்கடங்களை போக்கும் சங்காபிஷேக தரிசனம்! appeared first on Dinakaran.

Tags : Sangam ,Srirangapatna ,Mysore ,Karnataka ,Kaveri ,Lok Bhavani ,
× RELATED கருங்குழியில் விபத்து, நோயால் கால்களை இழந்தவர்களுக்கு செயற்கை கால்