×
Saravana Stores

சிறுமுகை லிங்காபுரம் அருகே யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு

 

மேட்டுப்பாளையம், நவ.18: மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை லிங்காபுரம் பகுதி வனப்பகுதியையொட்டி இருப்பதால் காட்டு யானை, மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வகை வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி அவ்வப்போது ஊருக்குள் நுழைந்து வருவது வழக்கம். அவ்வாறு ஊருக்குள் நுழையும் வன விலங்குகள் பயிர்களை சேதம் செய்து வருவதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் கடந்த சில தினங்களாகவே லிங்காபுரம் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் என்பது அதிகரித்து வருகிறது. இதனையொட்டி சிறுமுகையில் இருந்து லிங்காபுரம் செல்லும் சாலையில் வாகனங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் பயணிக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து சிறுமுகை வனச்சரகர் மனோஜ் கூறுகையில், ‘‘தற்போது லிங்காபுரம் சுற்று வட்டார பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் வனப்பகுதியை ஒட்டியுள்ள சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை மெதுவாகவும், கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இயக்க வேண்டும்.

காட்டு யானைகளின் நடமாட்டம் இருப்பது தெரிய வந்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு வாகன ஓட்டிகள் ஊருக்குள் வரும் போது வனவிலங்குகள் நடமாட்டம் இருக்கிறதா? என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப பயணிக்க வேண்டும். காட்டு யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நிரந்தரமாக ஒரு வனவர் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழுவினர் லிங்காபுரம் பகுதியில் முகாமிட்டுள்ளனர். இந்த குழுவினர் காட்டு யானைகள் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

The post சிறுமுகை லிங்காபுரம் அருகே யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Sirumugai Lingapuram ,Mettupalayam ,
× RELATED சிறுமுகை அருகே ஒற்றை காட்டு யானை உலா : பொதுமக்கள் பீதி