சிறப்பு அழைப்பாளராக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், 48 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்து 1.50 லட்ச ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை வழங்கி பேசியது: வடசென்னையில் பல்வேறு நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன். தற்போது துணை முதல்வராகி முதல் நிகழ்ச்சியில் 48 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. சுயமரியாதை திருமணத்திற்கு அங்கீகாரம் இல்லாமல் இருந்தது. அண்ணா ஆட்சியில்தான் சுயமரியாதை திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. தமிழக முதல்வர் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கலைஞர் மகளிர் உதவி தொகை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு கோடியே 16 லட்சம் மகளிர் பயனடைகிறார்கள். இதுபோல் அரசு பள்ளியில் படித்து கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம், மாணவர்களுக்கு தமிழ்புதல்வன் திட்டம் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
அரசு பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு முதலமைச்சர் காலை உணவு திட்டம் மூலம் உணவு வழங்கப்படுகிறது. பல்வேறு திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைப்பதாக எடப்பாடி கூறுகிறார். முதலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என எடப்பாடி கூறினார். சேலத்தில் ஈடி ரெய்டு நடந்ததும் பாஜகவுடன் கூட்டணி குறித்து பேசலாம் என கூறுகிறார். அடுத்த ரெய்டு நடத்தினால் பாஜகவுடன் அதிமுகவை இணைத்து விடுவார். முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை வைத்தால்கூட எடப்பாடி ஏற்றுக்கொள்ளமாட்டார், ஆனால் மோடி, அமித்ஷா பெயரை திட்டங்களுக்கு வைத்தால் ஏற்றுக்கொள்வார்.
கலைஞர் 96 வயதிலும் மக்கள் பணியாற்றினார். நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 இடங்களில் மகத்தான வெற்றிபெற்றோம். இதுபோல் 2026ல் நடைபெறும் தேர்தலில் குறைந்தபட்சம் 200 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். 7வது முறையாக ஆட்சியில் நாம் அமரவேண்டும். ஒவ்வொருவரும் திமுக ஆட்சியில் செய்யும் திட்டங்கள் குறித்து வீடு வீடாக சென்று மக்களுக்கு எடுத்து கூறுங்கள். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், மாநில வழக்கறிஞரணி துணை செயலாளர் மருது கணேஷ், மாநில பொறியாளரணி துணை அமைப்பாளர் நரேந்திரன், சிறுபான்மையினரணி அமைப்பாளர் சுபேர்கான், மாவட்ட துணை செயலாளர் கமலக்கண்ணன், இளைய அருணா, கதிரேசன், மருத்துவரணி நிர்வாகிகள் கலைவாணன், பாண்டியராஜன், ஜெகன், சுரேஷ் பாபு, மாவட்ட நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், மணமக்களின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.
The post 48 ஜோடிகளுக்கு திருமண விழா; அடுத்த ரெய்டு நடத்தினால் பாஜகவுடன் அதிமுகவை இணைத்துவிடுவார் எடப்பாடி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.