அவர்களில் மணிப்பூர் மாநில அரசில் கடைநிலை ஊழியராக பணியாற்றி வந்த லாயிஷ்ராம் ஹீரோஜித்தின் மனைவி, அவரது 2 குழந்தைகள், மாமியார், மனைவியின் சகோதரி உள்ளிட்ட 6 பேர் தான் மாயமாகினர். இந்நிலையில் போரோபெக்ராவில் இருந்து 16 கி.மீ. தொலைவில் ஒரு பெண் மற்றும் 2 குழந்தைகளின் உடல்கள் நேற்று முன்தினம் இரவு கண்டெடுக்கப்பட்டன. மேலும் 3 பேரின் உடல்கள் நேற்று பிற்பகல் கண்டெடுக்கப்பட்டன. மாயமான 6 பேரின் உடல்கள்தான் இவை என்பதை போலீசார் உறுதி செய்தனர். அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடல்கள், பிரேதப் பரிசோதனைக்காக எஸ்எம்சிஎச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.
இதற்கிடையே 6 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட செய்தி பரவியதால், ஜிரிபாம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டு, கூடுதல் போலீசார், துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டனர். 7 மாவட்டத்தில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன. இதற்கிடையே வன்முறையாளர்கள், கொலை செய்யப்பட்டவா்களுக்கு நீதி கேட்டும், ராணுவ சிறப்பு சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தியும் மணிப்பூரின் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் பெரும் போராட்டம் நடத்தினர்.
இம்பாலில் வசிக்கும் 3 அமைச்சர்கள் மற்றும் மாநில முதல்வர் பிரேன் சிங்கின் மருமகனும், பாஜக எம்எல்ஏவுமான ஆர்.கே.இமோ உட்பட 6 பாஜக எம்எல்ஏக்களின் வீடுகளை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். சாலைகளில் டயர்களை எரித்து, போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தினர். கடைகள், வா்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. பல இடங்களில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. கலவரக்காரர்களை கட்டுப்படுத்த கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி, பாதுகாப்புப் படையினர் விரட்டியடித்தனர். பல மாதங்களுக்கு பின் மீண்டும் வெடித்துள்ள போராட்டங்களால் மணிப்பூரில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே மணிப்பூரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் அமைதியை மீட்டெடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்புப் படையினருக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.
மணிப்பூரின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால், ஆளுங்கட்சியை சேர்ந்த 19 பாஜக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் ஏற்கனவே கடந்த மாதம் மாநில முதல்வரை மாற்றக் கோரி, பாஜக தலைமைக்கு கடிதம் எழுதியிருந்தனர். அதேநேரம் மணிப்பூரில் உள்ள சில அமைப்புகள், அடுத்த 24 மணி நேரத்தில் ஆயுதமேந்திய தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில அரசுக்கு கெடு விதித்துள்ளன. மணிப்பூரில் ஆறு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஆயுதப்படை சிறப்பு சட்டங்களை ஒன்றிய அரசு மீண்டும் அமல்படுத்தி உள்ளதால், அந்த சட்டத்தை திரும்ப பெறுமாறு ஒன்றிய அரசை மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஒன்றிய அரசுக்கு மாநில இணைச் செயலாளர் (உள்துறை) எழுதிய கடிதத்தில், ‘கடந்த 15ம் தேதி நடந்த மாநில அமைச்சரவை கூட்டத்தில், மணிப்பூரில் ஆயுதப்படை அதிகார சிறப்பு சட்டத்தை மீண்டும் அமல்படுத்தியது குறித்து விவாதிக்கப்பட்டது. தற்போதைய சூழலில், இந்த சட்டத்தை மறுஆய்வு செய்து ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக ஆயுதப்படை அதிகார சிறப்பு சட்டத்தை ஒன்றிய அரசு கடந்த 14ம் தேதி தொடங்கி அடுத்த 6 மாதத்திற்கு மணிப்பூரின் குறிப்பிட்ட இடங்களுக்கு அமல்படுத்தியது. மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளதை எதிர்கட்சிகள் கடுமையாக கண்டித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
The post மீண்டும் வன்முறை வெடித்ததால் தொடர் பதற்றம்; மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு சட்டம் வாபஸ்?: ஒன்றிய அரசுக்கு மாநில அமைச்சரவை அழுத்தம் appeared first on Dinakaran.