திடீரென காலை 11.30 மணிக்கு மேல் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் 20 நிமிடங்கள் வரை நீடித்தது. அதன் பிறகு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதற்கிடையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் 6 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
19ம் தேதி முதல் 22ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு(இன்று) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில்(நேற்று) தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. அதிகப்பட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கில் 12 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இதே போல திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 11 செ.மீ, காக்காச்சியில் 10 செ.மீ, மாஞ்சோலையில் 9 செ.மீ., கடலூர் மாவட்டம் கொத்தவாச்சேரி, நாகப்பட்டினம் ஏடபிள்யூஎஸ், அண்ணாமலை நகர், சிதம்பரத்தில் தலா 5 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி 3 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.