தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு 2022-23, 2023-24, 2024-25ம் ஆண்டுகளுக்கான கட்டணத்தை நிர்ணயித்து நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையிலான கட்டண நிர்ணய குழு உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில், தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள வசதிகள் தான், தனியார் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிகளிலும் உள்ளது.

ஆசிரியர்களுக்கான ஊதியம் உள்பட தனியார் சுயநிதி கல்லூரிகளுக்கான செலவுகள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஆனால், தனியார் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிகளுக்கு அவ்வளவு செலவுகள் இல்லை. தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளுக்கான கட்டணத்தை விட, தனியார் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிகளுக்கு அதிக கட்டணம் நிர்ணயித்துள்ளது குறித்து கட்டண நிர்ணயக் குழுவுக்கு மனு அளித்தும் அது பரிசீலிக்கப்படவில்லை.

தனியார் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிகளுக்கு இணையாக தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளுக்கும் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார் மற்றும் பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.மனுதாரர் சுயநிதி மருத்துவ கல்லூரிகள் சங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு 2 வாரங்களில் தமிழக அரசும், கட்டண நிர்ணய குழுவும் பதில்மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.

The post தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: