இதன்பிறகு கணபதி ஹோமம், உஷபூஜை உள்பட வழக்கமான பூஜைகள் தொடங்கின. அதிகாலை 3.30 மணியளவில் இந்த மண்டல காலத்தின் முதல் நெய்யபிஷேகம் தொடங்கியது. டிசம்பர் 25ம் தேதி வரை அதிகாலை 3 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரையும் 18 மணிநேரம் நடை திறந்திருக்கும். தினமும் ஆன்லைனில் 70 ஆயிரம் பேருக்கும், உடனடி முன்பதிவில் 10 ஆயிரம் பேருக்கும் தரிசனத்திற்கு முன்பதிவு செய்யலாம். நவம்பர் 30ம் தேதி வரை ஆன்லைன் முன்பதிவு முடிவடைந்துவிட்டது. பம்பை, எருமேலி மற்றும் வண்டிப்பெரியார் சத்திரம் ஆகிய இடங்களில் உடனடி முன்பதிவுக்கு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.
நேற்று சனிக்கிழமை என்பதாலும், கார்த்திகை 1ம் தேதி என்பதாலும் சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மண்டல கால பூஜைகள் தொடங்கியுள்ளதை முன்னிட்டு சபரிமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏடிஜிபி ஸ்ரீஜித் மேற்பார்வையில் சன்னிதானத்தில் மட்டும் 1500க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பத்தனம்திட்டா, கோட்டயம், செங்கணூர் உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து பம்பைக்கு கேரள அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது.
The post சபரிமலையில் மண்டல கால பூஜைகள் தொடக்கம்: ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.