மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் ஒவ்வொரு பூத்திலும் வெற்றி பெறுவதில் கட்சி தொண்டர்கள் கவனம் செலுத்த வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். மகாராஷ்டிராவில் நவம்பர் 20ம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி பாஜ தொண்டர்களுடன் நேற்று பிரதமர் மோடி காணொளி வாயிலாக உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: நீங்கள் அனைவரும் பாஜவின் வலிமையான தூண்கள். நீங்கள் மோடியின் நேரடி பிரதிநிதிகள். மக்கள் தங்களுடைய குறைகளை உங்களிடம் சொன்னால், அதை மோடியிடம் சொன்னது போல் நிம்மதியாக உணர்கிறார்கள்.
நாம் அனைவரும் ஒன்றாக வளர்ச்சி அடைய வேண்டும். இது தான் நமது நோக்கம். பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளுடன் உரையாட பூத் அளவிலான கூட்டங்களை நடத்துங்கள். பாஜ தலைமையிலான அரசின் திட்டங்களை அவர்களிடம் பரப்ப வேண்டும். ஒவ்வொரு பூத்திலும் வெற்றி பெறுவதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். வாக்காளர் மத்தியில் பிரசாரம் செய்யும் போது டாக்டர்கள் போன்ற நிபுணர்களை ஈடுபடுத்துங்கள். எதிர்க்கட்சிகளான மகாவிகாஸ் அகாடி கூட்டணியினர் பரப்பும் பொய் வாக்குறுதிகளை வாக்காளர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
நாட்டில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிக்கள் தெரியாத காலம் வரை காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. ஆனால் தற்போது இந்த சமூகங்கள் ஒன்றிணைவதால் காங்கிரஸ் பலவீனமடைகிறது. எனவே எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிக்களை உடைக்க காங்கிரஸ் இப்போது விரும்புகிறது. மகாராஷ்டிராவில் உள்ள மகாயுதி அரசு சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் அதிகாரம் அளிக்க முயற்சிக்கிறது. எங்கள் அரசுக்கும் மகாவிகாஸ் அகாடிக்கும் வித்தியாசம் இது தான். எனவே மகாயுதியை வெற்றி பெற செய்ய பாஜவின் பூத் ஊழியர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பிரசாரம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் ஒவ்வொரு பூத்திலும் வெற்றி பெற கவனம் செலுத்துங்கள்: பாஜ தொண்டர்களுக்கு மோடி அறிவுரை appeared first on Dinakaran.