ராமநாதபுரம் : வடகிழக்கு பருவமழை துவங்கியும் ராமநாதபுரம் மாவட்டத்தில் போதிய மழையில்லாததால் முளைத்த பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். மீண்டும் பயிரிட பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மானவாரி எனப்படும் பருவமழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்யப்படுகிறது.
அதன்படி திருவாடனை, ராமநாதபுரம், மண்டபம், திருப்புல்லாணி, நயினார்கோயில், பரமக்குடி, முதுகுளத்தூர், கடலாடி, கமுதி உள்ளிட்ட 11 யூனியன்களில் நெல் பிரதான பயிராக பயிரிடப்படுகிறது. நடப்பாண்டில் மாவட்டம் முழுவதும் சுமார் 3 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் பயிரிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் விவசாயிகள் பிரதான வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து கடந்த செப்டம்பர் மாதம், அக்டோபர் மாத முதல் வாரத்தில் உழவார பணிகளை செய்தனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் கடந்த மாதமே பிரதான வடகிழக்கு பருவமழை துவங்கியது. ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதில் திருவாடனை பகுதியில் பெய்த கனமழைக்கு நன்றாக முளைத்திருந்த பயிர்கள் தண்ணீர் மூழ்கி நாசமானது. இதனால் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் சேதமடைந்தது. ஆனால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதியில் மழை பெய்தாலும் கூட வயற்காட்டில் தேங்கி நிற்கும் அளவில் இல்லை.
இதனால் முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, சிக்கல் உள்ளிட்ட சில இடங்களில் முளைத்திருந்த பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகிறது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: முதுகுளத்தூர், கடலாடி, சிக்கல், சாயல்குடி போன்ற பகுதிகளில் கடந்த செப்டம்பர் கடைசி, அக்டோபர் முதல் வாரத்தில் பெய்த மழையால் உழவார பணிகள் செய்து நெல் விதைக்கப்பட்டது.
தொடர்ந்து பெய்த மழைக்கு பயிர்கள் நன்றாக வளர்ந்து வந்தது. இடைப்பட்ட காலத்தில் மழை பெய்யாததால் விவசாய நிலங்கள் வறண்டு முளைத்த பயிர்கள் கருகி விட்டது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் வருகின்ற நாட்களில் மழை பெய்தால் கூட முளைத்த பயிர்களுக்கு நன்மை கிடையாது.
எனவே பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் மற்றும் இழப்பீடு தந்தால், அந்த தொகையை வைத்து நாற்று நட்டு மீண்டும் விவசாயம் செய்யும் நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு கூறினர். நிரந்தர பாசன வசதி வேண்டும்: மதுரை- ராமநாதபுரம் வழித்தடத்தில் வைகையிலிருந்து பிரிந்து பரளை ஆறு வழியாக கமுதி குண்டாறு. அபிராமம் கிருதுமால்நதி மற்றும் கிளை ஆறுகளான முதுகுளத்தூர் ரெகுநாதகாவிரி, நாராயணகாவிரி, கூத்தான்கால்வாய், கடலாடி மலட்டாறு, சாயல்குடி சங்கரதேவன்கால்வாய், கஞ்சம்பட்டி ஓடை, வைப்பாறு கிளை, பரமக்குடி வைகை மற்றும் நயினார்கோயில், போகலூர், திருஉத்தரகோசமங்கை களிரி கால்வாய், ராமநாதபுரம் பெரிய கண்மாய், ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் பாசன கால்வாய் மற்றும் சிவகங்கை மாவட்டத்திலிருந்து திருவாடனை பகுதிக்கு வரக்கூடிய மணிமுத்தாறு, கோட்டைக்கரை ஆறு, பாம்பாறு, விருச்சுழி ஆறு உள்ளிட்ட சிறு ஆறுகள், ஓடைகள், நீர்வழித்தடங்கள் உள்ளன. இதன்மூலம் சுமார் 1,731 பாசன கண்மாய் உள்ளிட்ட விவசாய பயன்பாட்டிற்குரிய நீர்நிலைகள் பயன்பெறும்.
ஆனால் தொடர் மழை காலத்தில் காவிரி, மேட்டூர் அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து, வைகை அணைக்கு உபரிநீர் வெளியேற்றம் மூலம் தண்ணீர் திறந்து விடப்பட்டு மதுரை வைகையில் நீர்வரத்து அதிகரிக்கும் போது ராமநாதபுரம் மாவட்டத்தின் பாசன வசதிக்காக வைகை அணையிலிருந்து மானாமதுரை வழியாக பார்த்திபனூர் பரளையாறு நீர்வழித்தடத்தில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இவை பரமக்குடி, ராமநாதபுரம் பகுதியிலுள்ள நீரின் பயன்படுத்தும் நிரந்த ஆயக்கட்டுதாரர் பகுதியாக உள்ளதால் ஆண்டுதோறும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
தற்போது கூட நாள் ஒன்றிற்கு 500 கன அடி முதல் 3000 கன அடி வரை தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் முதுகுளத்தூர் தொகுதியிலுள்ள கமுதி, முதுகுளத்தூர், கடலாடி தாலுகா மற்றும் பரமக்குடி தொகுதியிலுள்ள நயினார்கோயில், திருவாடனை தொகுதியிலுள்ள ஆர்.எஸ்.மங்கலம், திருவாடனை பகுதிகள் வைகை நீரை பயன்படுத்த நிரந்தர ஆயக்கட்டுதாரர் பகுதியாக இல்லை என்பதால் தண்ணீர் பிரித்து வழங்கப்படுவதில்லை.
இதனால் இப்பகுதிகளில் மானவாரி எனப்படும் பருவமழை கைவிட்டால் இறவை பாசன வசதியின்றி போதிய தண்ணீரின்றி பயிர்கள் பாதிக்கப்படுவது பல ஆண்டுகாலமாக தொடர்ந்து நீடிக்கிறது. அதே சமயம் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சில நேரங்களில் மட்டும் அதிகாரிகள் தண்ணீர் திறந்து விடுகின்றனர். எனவே பாசன தேவைக்காக அனைத்து பகுதியினருக்கும் வைகை நீரை பயன்படுத்தும் உரிமை வழங்கி நிரந்த ஆயக்கட்டுதாரர்களாக்கி மாவட்டத்தின் அனைத்து பகுதிக்கும் தண்ணீரை பிரித்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தேக்கமடைந்த உரங்கள்
மாவட்டத்தின் தேவைக்காக 5,607 மெட்ரிக் டன் யூரியா, 1,984 மெட்ரிக் டன் டி.ஏ.பி. 120 மெட்ரிக் டன் பொட்டாஷ், 2,060 மெ.டன் காம்பளக்ஸ் என 9,770 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டது. இந்தநிலையில் மாவட்டத்தில் கடந்த காலங்களில் அக்டோபர் கடைசி, நவம்பர் முதல் வாரத்தில் நெல் பயிருக்கு களை எடுத்தல், உரம் இடுதல் போன்ற பணிகள் நடப்பது வழக்கம், இதனால் உரம் தட்டுபாடு ஏற்படுவது வழக்கம். ஆனால் தற்போது போதிய தண்ணீரின்றி பயிர்கள் கருகி வரும் நிலையில் உரமிடுவதற்கு விவசாயிகள் முன்வரவில்லை. இதனால் உரங்கள் தேங்கமடைந்துள்ளது.
The post ராமநாதபுரம் மாவட்டத்தில் முளைத்த பயிர்கள் தண்ணீரின்றி கருகும் பரிதாபம் appeared first on Dinakaran.