*3 பேருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை
கோவை : கோவையில் துக்க வீட்டில் ஜெனரேட்டர் இயங்க டீசல் ஊற்றியபோது தீப்பிடித்ததில் தனியார் பள்ளி ஆசிரியை உடல் கருகி பரிதாபமாக பலியானார்.கோவை கணபதி 3வது தெருவை சேர்ந்தவர் ராமலட்சுமி (85). இவர் வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் இரவில் உயிரிழந்தார். இதனால் அவரது வீட்டில் பிரீசர் பாக்சில் அவரது உடல் வைக்கப்பட்டு இருந்தது. துக்கம் விசாரிப்பதற்காக உறவினர்கள் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து வந்த வண்ணம் இருந்தனர். ஒரு புறம் இறுதி சடங்குக்கான நிகழ்வுகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், கணபதியில் ஒரு பகுதியில் மட்டும் நேற்று மின்தடை செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக ஜெனரேட்டர் மூலமாக பீரீசர் பாக்ஸ் இயங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்காக நேற்று காலை ஜெனரேட்டரை இயக்க டீசல் ஊற்றினர். அப்போது திடீரென தீப்பிடித்தது. தீ மள, மளவென பரவியதால், அங்கிருந்த உறவினர்கள் வீட்டின் ஒரு அறைக்குள் சென்று தப்பிக்க பார்த்தனர்.
அங்கும் தீ பரவியதால் 4 பேர் மீது தீப்பற்றியது. உடல் முழுவதும் எரிய துவங்கியதால் வலியால் அலறி துடித்தனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பின் பக்க கதவு வழியாக உள்ளே நுழைந்து 4 பேரையும் மீட்டனர். பின்னர் அவர்களை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் அங்கு பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் பிரீசர் பாக்ஸ் மற்றும் வீட்டில் இருந்த சில உடைமைகள் தீயில் சேதமானது. பிரீசர் பாக்ஸ் உள்ளே தீ பரவாததால் சடலத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலன் அளிக்காமல் கணபதியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை பத்மாவதி (53) என்பவர் உயிரிழந்தார். இவர் உயிரிழந்த ராமலட்சுமியின் மருமகள் ஆவார்.
பலத்த தீக்காயமடைந்த உறவினர்களான பானுமதி, ராஜேஸ்வரன், ஸ்ரீராம் ஆகிய 3 பேருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். துக்க வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆசிரியை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post கோவையில் ஜெனரேட்டருக்கு டீசல் ஊற்றியபோது விபரீதம் துக்க வீட்டில் தீப்பிடித்து தனியார் பள்ளி ஆசிரியை உடல் கருகி பலி appeared first on Dinakaran.