திருச்சுழி : நரிக்குடி அருகே மரையூரில் வரலாற்று சின்னமான அன்ன சத்திரத்தில் 250 ஆண்டு கால பழமை வாய்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.நரிக்குடி அருகே மரையூர் கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராணி மங்கம்மாள், மருதுபாண்டியர்களின் வரலாற்றுக்கு ஆதாரமாக விளங்கி வரும் அன்னசத்திரம் சிதிலமடைந்து அழியும் நிலையில் உள்ளது. இதனை புதுப்பித்து தமிழக அரசு நினைவு சின்னமாக அறிவித்து பாதுகாக்க வேண்டுமென தினகரனில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சில தினங்களுக்கு முன்பு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் ஆகியோர் அன்னச்சத்திரத்தை ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் நரிக்குடியில் சத்திரம் முழுவதும் சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகள் அதிகளவில் புதைந்து கிடப்பதாக தொல்லியல் துறை ஆய்வாளர்கள் அமைச்சரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் தகவல்கள் தெரிவித்தனர். இதனையடுத்து நரிக்குடி சத்திரத்தையும் உடனடியாக ஆய்வுகள் மேற்கொள்ள தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டனர்.இதனையடுத்து நரிக்குடி சத்திரத்தை விருதுநகர் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ஆய்வுகள் மேற்கொண்டனர்.
அப்போது நரிக்குடி சத்திரத்தில் புதைந்து கிடந்த சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பழமை வாய்ந்த கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதிலிருந்த எழுத்து முறைகளை தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ஆய்வு செய்த போது அதில் சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதி ஆதிச்சநல்லூர் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்துள்ளது எனவும், அப்பகுதியில் உள்ள நஞ்சை, புஞ்சை என இரு வகையான நிலங்கள் பலருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது எனவும் எழுதப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் அவ்வாறு தானமாக வழங்கப்பட்ட நிலங்களில் விளையும் தானியங்களில் மூன்றில் ஒரு பங்கை அன்னதானம் வழங்குவதற்கு வழங்க வேண்டுமெனவும், மேற்படி தானமாக வழங்கப்பட்ட நிலங்களை யாரும் உரிமை கொண்டாடவோ, சொந்தமாக்கி கொள்ளும் நோக்கில் நிலங்களை அபகரிக்கவோ, கொடையளிப்பதை தடுக்கவோ நினைப்பவர்கள் காராம் பசுக்களை கொன்ற கடுமையான பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடும் எனவும் கல்வெட்டில் தெளிவாக எழுதப்பட்டிருப்பதாகவும் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.இதன் மூலம் சத்திரத்தை சுற்றியுள்ள நிலங்களை பலருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது என தெரிய வருகிறது.
மேலும் நரிக்குடி சத்திரத்தை முழுமையாக ஆய்வுகள் செய்ய மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு முறையான அனுமதி பெற்று பின்னர் விரைவில் நரிக்குடி சத்திரம் முழுமையாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படுமென தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
The post நரிக்குடி அருகே 250 ஆண்டு பழமையான கல்வெட்டு அன்ன சத்திரத்தில் கண்டெடுப்பு appeared first on Dinakaran.