×
Saravana Stores

நிலச்சரிவு பாதிப்புகளுக்கு நிவாரண நிதி ஒதுக்க ஒன்றிய அரசு மறுப்பு வயநாட்டில் 19ம் தேதி முழு அடைப்பு போராட்டம்: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் அறிவிப்பு

திருவனந்தபுரம்: நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரண நிதி வழங்காததைக் கண்டித்தும், தேசிய பேரிடராக அறிவிக்க மறுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கூட்டணிக் கட்சிகள் சார்பில் வயநாடு மாவட்டத்தில் வரும் 19ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலுள்ள சூரல்மலை, முண்டக்கை ஆகிய இடங்களில் கடந்த ஜூலை 30ம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 450க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இன்னும் 50க்கும் மேற்பட்டோரை காணவில்லை.

100க்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. பல ஏக்கர் தேயிலை, காப்பித் தோட்டங்கள் அழிந்தன. இந்த பயங்கர நிலச்சரிவில் ரூ.1000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக கேரள அரசு தெரிவித்தது. இதை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும், ரூ.1500 கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் கேரள அரசு சார்பில் ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் நிலச்சரிவு ஏற்பட்டு பல மாதங்கள் ஆகியும் இதுதொடர்பாக ஒன்றிய அரசு இதுவரை கேரளாவுக்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை.

இந்நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் கேரள அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பது: வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது. பேரிடர் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்குத் தான் உள்ளது. 2024-25ல் கேரள அரசுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதிக்காக ரூ.388 கோடி வழங்கப்பட்டது. இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு கேரளா முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் உள்பட பெரும்பாலான கட்சிகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 19ம் தேதி வயநாடு மாவட்டத்தில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கூட்டணிக் கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்தப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post நிலச்சரிவு பாதிப்புகளுக்கு நிவாரண நிதி ஒதுக்க ஒன்றிய அரசு மறுப்பு வயநாட்டில் 19ம் தேதி முழு அடைப்பு போராட்டம்: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Union government ,Wayanad ,Congress ,Communist ,Thiruvananthapuram ,Communist alliance ,Wayanad district ,Kerala ,Dinakaran ,
× RELATED வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக...