இந்திய பொருளாதார கட்டமைப்பை சுரண்டும் கார்ப்பரேட் நிறுவனங்கள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: செபி தலைவர் மாதபி புரி புச்-க்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு தலைவர் விவாதிப்பது யூடியூபில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், விமான பயணத்தின் போது, பவன் கேராவுடன் அவர் விவாதித்த விஷயங்கள் பற்றி எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி நேற்று பதிவிடுகையில், இந்தியாவின் பொருளாதாரக் கட்டமைப்பானது, நாட்டின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் செயல்படும்.

ஆனால், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளிருந்து பொருளாதாரத்தை சுரண்டுகின்றன. மாதபி புச் போன்ற சக்திவாய்ந்த கட்டுப்பாட்டாளர்கள் அவர்கள் மேற்பார்வையிட வேண்டிய நிறுவனங்களுடனேயே கைக்கோர்த்து செயல்படுகின்றனர். ஓட்டைகளைப் பயன்படுத்தி, ஒழுங்குமுறைகளைத் திரித்து, பொது நலனைக் காட்டிலும் கார்ப்பரேட் லாபத்தை முதன்மைப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த திட்டம்.

அதற்கான விலையை சாதாரண மக்கள் கொடுக்கிறார்கள். இந்த நெறிமுறையற்ற பரிவர்த்தனைகளை அம்பலப்படுத்த நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இது ஏகபோகங்களைப் பற்றியது மட்டுமல்ல; இது ஜனநாயகம், நியாயமான போட்டி மற்றும் ஒவ்வொரு இந்தியனின் குரலையும் பாதுகாப்பது என்று வலியுறுத்தினார்.

* கோடீஸ்வரர்களின் கைப்பாவை மோடி
ஜார்கண்ட், கோடா மாவட்டத்தில் காங்கிரஸ் தேர்தல் பேரணியில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி, ‘‘ எதிர்க்கட்சியான இந்தியா அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், பாஜ அதை குப்பைத் தொட்டியில் போட முயற்சிக்கிறது. ராகுல் சிவப்பு புத்தகத்தை ஒளிரச் செய்கிறார் என்று பிரதமர் மோடி கூறுகிறார். அதன் உள்ளடக்கம் முக்கியமானது, நிறம் அல்ல. நீங்கள் அதைப் படித்திருந்தால், நீங்கள் வெறுப்பைப் பரப்பி சமூகத்தை பிளவுபடுத்தியிருக்க மாட்டீர்கள்.

இது இந்திய அணிக்கும், பாஜ-ஆர்எஸ்எஸ்க்கும் இடையிலான சித்தாந்த சண்டை. நாங்கள் அரசியலமைப்பைப் பாதுகாக்கிறோம், பாஜ-ஆர்எஸ்எஸ் அதை குப்பைத் தொட்டியில் போட முயற்சிக்கின்றன. அவர்கள் வன்முறையைப் பரப்பி சமூகத்தை சாதி, மொழி,மதத்தின் அடிப்படையில் பிளவுபடுத்த முயற்சிக்கிறார்கள்.

நான் மோடியைப் பார்த்தோ அல்லது அவரது 56 அங்குல மார்பை பார்த்தோ அஞ்சவில்லை. அவர் கோடீஸ்வரர்களின் கைப்பாவையாக உள்ளார். பகலில் மக்களுக்கு பாடம் கற்பிக்கிறார்.இரவில் தொழிலதிபர்களின் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். நிலத்தை கைப்பற்றுவதற்காக மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டது. மும்பை தாராவியில் ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள நிலத்தை கோடீஸ்வர தொழிலதிபருக்கு பிரதமர் மோடி தாரைவார்த்துள்ளார்’’ என குற்றம் சாட்டினார்.

The post இந்திய பொருளாதார கட்டமைப்பை சுரண்டும் கார்ப்பரேட் நிறுவனங்கள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: