- இந்தியா
- சீனா
- ஆசிய சாம்பியன்ஷிப் பெண்கள் ஹாக்கி ராஜ்கிர்
- மகளிர் ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை
- ராஜ்கிர், பீகார்
- ஆசிய சாம்பியன்ஷிப் பெண்கள் ஹாக்கி
- தின மலர்
ராஜ்கிர்: பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கிப் போட்டி பீகார் மாநிலம் ராஜ்கிரில் நடக்கிறது. நடப்பு சாம்பியன் இந்தியா உட்பட 6 அணிகள் போட்டியில் பங்கேற்றுள்ளன. நவ.11ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் நேற்று முன்தினம் வரை 3 சுற்று லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. நேற்று ஓய்வு நாள். லீக் சுற்றில் இதுவரை தாங்கள் விளையாடிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற அணிகளாக இந்தியா, சீன பெண்கள் அணிகள் இருக்கின்றன.
எனினும் கோல்கள் வித்தியாசத்தின் அடிப்படையில் சீனா புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அந்த அணி 3 ஆட்டங்களில் 22 கோல்களை அடித்ததுடன், ஒரே ஒரு கோல் மட்டுமே வாங்கியுள்ளது. அதனால் கோல் வித்தியாசம் 21ஆக இருக்கிறது. அதேசமயம், இந்திய அணியின் கோல் வித்தியாசம் 18 ஆக இருக்கிறது. இந்தியா எதிரணிகள் மீது 20 கோல்களை அடித்ததுடன், அந்த அணிகள் 2 கோல்களை போட வாய்ப்பளித்து விட்டது. அதனால், கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் இந்தியாவை சீனா முந்தியுள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெறும் 4வது சுற்று லீக் ஆட்டத்தில் இந்தியா-சீனா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்தப் போட்டியில் வெல்லும் அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை உறுதி செய்யும். ஒருவேளை ஆட்டம் டிராவில் முடிந்தால் சீனா முதல் இடத்தில் தொடரும். அதே நேரத்தில் மற்ற அணிகளின் இதுவரையிலான வெற்றி தோல்விகளின் அடிப்படையில் சீனா, இந்திய அணிகள் முதல் 2 இடங்களை உறுதி செய்ததுடன் அரை இறுதிக்கு முன்னேறி விட்டன.
எஞ்சிய 2 இடங்களுக்கான போட்டியில் மலேசியா, ஜப்பான், கொரியா, தாய்லாந்து அணிகள் உள்ளன. எனவே மீதியுள்ள 2 ஆட்டங்களில் கிடைக்கும் வெற்றி தோல்விகள் இந்திய, சீன அணிகளை பாதிக்காது. ஆனால் லீக் சுற்றில் முதலிடம் பிடிப்பது ஹாக்கியில் பாரம்பரியமிக்க இந்திய அணிக்கு கவுரவ பிரச்னை. அதனால் நடப்பு சாம்பியனான இந்தியாவின் வீராங்கனைகள் தங்கள் அதிரடியை இன்றும் தொடர்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
The post யாருக்கு முதல் இடம் இந்தியா-சீனா மோதல்: ஆசிய சாம்பியன்ஷிப் பெண்கள் ஹாக்கி appeared first on Dinakaran.