×
Saravana Stores

“ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை தொடங்கி வைத்து, தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

அரியலூர்: “ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தின் இரண்டாம் கட்டம் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரியலூர் மாவட்டம், வாரணவாசி குழந்தைகள் மையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (15.11.2024) அரியலூர் மாவட்டம், வாரணவாசி குழந்தைகள் மையத்தில், தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகளை களையும் நோக்குடன் செயல்படுத்தப்பட்டு வரும் முன்னோடி திட்டமான “ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கி வைத்து, தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். ஆரோக்கியமான குழந்தைகளே, நாட்டின் வளமான எதிர்காலம் என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 7.05.2022 அன்று சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை நலமுடன் வளர்த்தெடுக்கும் நோக்கத்துடன், பரந்துபட்ட அளவில் குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்ய இருக்கிறோம் என்றும், மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு மருத்துவ உதவியும், ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டம் ஒன்றும் ஏற்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது என்றும் அறிவித்தார்.

அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் மற்றும் சுகாதாரத்துறை ஒன்றிணைந்து, 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்துக் குறைபாடுடைய குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டு, மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள் மற்றும் ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகள் ஆகியோரைப் பிரித்தறிந்து, குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டினை நீக்க ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ என்ற புதிய திட்டத்தை நீலகிரி மாவட்டம், தொட்டபெட்டா ஊராட்சி முத்தோரை குழந்தைகள் மையத்தில் 21.5.2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் தீவிர ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக கண்டறியப்பட்ட குழந்தைகளில் சுமார் 77.3% குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர் என்று குறிப்பிடத்தக்கது. பிறந்தது முதல் ஆறு மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே உணவாக வழங்கப்பட வேண்டும்.

ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மார்களின் உடல்நலம் பேணினால் மட்டுமே, குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்த முடியும். எனவேதான், தற்போது 76,705 ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள 0-6 மாத குழந்தைகளின் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை அவர்களின் வீட்டிற்கே சென்று வழங்குவதோடு மட்டுமல்லாமல், குழந்தைகளின் நிலையை தொடர்ந்து கண்காணிக்கும் “ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தின் இரண்டாம் கட்டம் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்படும். முதலமைச்சர் இன்றையதினம் அரியலூர் மாவட்டம், வாரணவாசி குழந்தைகள் மையத்தில் “ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தொடங்கி வைத்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் அமைக்கப்பட்ட ஊட்டச்சத்து உணவுகள் பற்றிய கண்காட்சி அரங்கத்தினை பார்வையிட்டு, அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து உணவுகளை சுவைத்துப் பார்த்தார்.

பின்னர், அங்கன்வாடி குழந்தைகளுக்கு மாப்பிள்னை சம்பா, தூயமல்லி, வரகு முறுக்குகள், கருப்புகவுனி மற்றும் தூயமல்லி அதிசரங்கள், திணை லட்டு ஆகிய ஊட்டச்சத்து மிகுந்த தின்பண்டங்களை வழங்கி, அவர்களுடன் கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். இப்பெட்டகமானது, நெய், பேரிச்சம்பழம், ஊட்டச்சத்து மாவு, இரும்புசத்து டானிக், பருத்தி துண்டு (Towel), பிளாஸ்டிக் பக்கெட் மற்றும் கப் ஆகிய பொருட்களை கொண்டது. ஊட்டச்சத்து பெட்டகங்களை பெற்றுக் கொண்ட தாய்மார்கள் முதலமைச்சர் அவர்களுக்கு தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். “ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடங்கப்பட்ட இன்றையதினமே அனைத்து மாவட்டங்களிலும், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இத்திட்டத்தை தொடங்கி வைத்து, ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்குவார்கள்.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சமூக நலன் – மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி. பி. கீதா ஜீவன், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொல். திருமாவளவன், ஆ. ராசா, சட்டமன்ற உறுப்பினர் க.சோ.கா. கண்ணன், சமூக நலன் – மகளிர் உரிமைத் துறை செயலாளர் திருமதி ஜெயஸ்ரீ முரளிதரன், இ.ஆ.ப., அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பொ. இரத்தினசாமி, இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

The post “ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை தொடங்கி வைத்து, தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.U. ,K. Stalin ,Ariyalur ,Chief Minister of Tamil Nadu ,Ariyalur District ,Varanavasi Children's Centre ,Mu. K. Stalin ,Dinakaran ,
× RELATED நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!