ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே ரூ.1.99 கோடி மதிப்பீட்டில் தரைமட்ட பாலம் உயர்மட்ட பாலமாக மாற்றி திறக்கப்பட்டுள்ளதால் 20க்கும் மேற்பட்ட கிராமமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ராஜபாளையம் அருகே உள்ள பகுதி சமுசிகாபுரம். இப்பகுதியில் இருந்து வடகரை கிராமத்திற்கு செல்லும் மாநிலச் சாலை 186ல் தரைமட்ட பாலம் உள்ளது. இப்பாலத்தை கடந்து தான் சத்திரப்பட்டியிலிருந்து கோபாலபுரம், வடகரை, வரகுணராமபுரம், மேட்டுவடகரை, சிவலிங்காபுரம், அருணாசலபுரம், வலையப்பட்டி, ஆலங்குளம், அப்பையநாயக்கன்பட்டி உட்பட பல்வேறு கிராமத்தினர் விவசாய வேலைக்கும் போக்குவரத்திற்கும் பல்வேறு ஊர்களுக்கும் சென்று வருகின்றனர்.
இப்பாலத்தை கடந்து தான் விவசாய விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்கும் தொழிற்சாலைகள் நிறைந்த ராஜபாளையம் பகுதிக்கு வந்து செல்வதற்கும் ராஜபாளையத்திலிருந்து மதுரை, சென்னை உட்பட பெருநகரங்களுக்கு செல்வதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்தாண்டு பெய்த கனமழை காரணமாக சமுசிகாபுரம் மற்றும் வடகரை சுற்றியுள்ள நீர் பிடிப்பு பகுதிகளில் நீர் நிலைகள் நிரம்பி தரைமட்ட பாலத்தை கடந்து காட்டாற்று வெள்ளமாக ஓடியது. இதன் காரணமாக 20க்கும் மேற்பட்ட கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
இது குறித்து கிராமமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும் நெடுஞ்சாலை துறையினருக்கும் புகார் மனு அனுப்பிய நிலையில் தமிழ்நாடு முதல்வர் மழைக்காலங்களில் பெரிதும் பாதிக்கப்படும் தரைமட்ட பாலங்களை உயர் மட்ட பாலமாக மாற்ற உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாக்கியலட்சுமி, உதவி கோட்ட பொறியாளர் ஆறுமுகம், உதவி பொறியாளர் உமாதேவி தலைமையிலான நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அப்பகுதியை ஆய்வு செய்து சுமார் ரூ.1.99 கோடி மதிப்பீட்டில் தரைமட்ட பாலத்தை உயர் மட்ட பாலமாக மாற்றி அமைக்கும் பணி மேற்கொண்டனர்.
தற்போது பாலம் பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மழைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில் உயர்மட்ட பாலம் திறக்கப்பட்டதை கண்டு 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர்.
The post மழைக்காலத்தில் போக்குவரத்து தடைபடாது; உயர்மட்ட பாலமாக மாறிய தரைப்பாலம்: கிராமமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.