திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மாலை 5 மணிக்கு பதில் ஒரு மணி நேரத்துக்கு முன்பாக 4 மணிக்கு திறக்கப்பட உள்ளது. மண்டல பூஜைக்காக சபரிமலையில் இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் குவிந்து வரும் நிலையில் ஏற்பாடுகள் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகரவிளக்கு பூஜைக்காக கேரளா, தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து மாலை அணிந்து சபரிமலை கோயிலுக்கு வருகை தர உள்ளனர். இரவு 7 மணிக்கு சபரிமலை, மாளிகைப்புரம் கோயில்களின் புதிய மேல்சாந்திகளான அருண்குமார் நம்பூதிரி மற்றும் வாசுதேவன் நம்பூதிரி ஆகியோர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு நடை சாத்தப்பட்டு, நாளை அதிகாலை 3மணிக்கு மண்டல கால பூஜைகள் நடைபெறும்.
இன்று நடை திறக்கப்படுவதை முன்னிட்டு, 30,000 பேர் முன்பதிவு செய்துள்ள காரணத்தால் மாலை 5 மணிக்கு பதில் ஒரு மணி நேரத்துக்கு முன்பாக 4 மணிக்கு திறக்கப்பட உள்ளது. பம்பையில் இருந்து மதியம் 1 மணி அளவில் சன்னிதானம் செல்வதற்கு முன்பதிவு செய்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். நாளை முதல் 18 மணி நேரம் பக்தர்கள் தரிசனம்செய்ய முடியும் என்றும், பிற்பகல் 2மணி நேரம் மட்டுமே நடை மூடப்பட்டிருக்கும் என தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நவம்பர் 30ந் தேதி முடிவடைகிறது.
The post சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக நடை திறப்பு: தேவசம்போர்டு வெளியிட்ட அறிவிப்பு appeared first on Dinakaran.