தொடர்ந்து, பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டிடக் கழிவுகளை கொட்டுவதை தவிர்க்கவும், திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கையை மேம்படுத்தவும் அபராதத் தொகை விதிக்கப்பட்டு வந்தது. கடந்த 5 ஆண்டுகளாகவே அபராதம் விதிக்கும் செயல்பாடு அமலில் இருந்து வந்தது. அபராத தொகை குறைவாக இருந்ததால் ஒரு சிலர் மீண்டும் மீண்டும் குப்பை கொட்டுவது உள்ளிட்ட விதிமீறல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இதனால் குப்பை கொட்டுவது, நீர்நிலைகளை சேதப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு வகையான விதிமீறல்களுக்கு அபராத தொகை 10 மடங்கு உயர்த்தி சென்னை மாநராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுமட்டுமல்ல, சென்னையில் பல்வேறு விதிகளை மீறும் குடியிருப்பாளர்களுக்கு அந்த இடத்திலேயே அபராதம் விதிக்கப்படும் ஸ்பாட் பைன் முறையை கொண்டு வரவும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் அதிரடியாக உத்தரவிட்டார்.
இந்நிலையில், சாலையில் குப்பையை கண்மூடித்தனமாக கொட்டுவது, கழிவுகளை தரம் பிரிக்காதது, சட்டவிரோத கழிவுநீர் வெளியேற்றம் மற்றும் கால்நடைகளை சாலையில் விடுவது ஆகியவற்றிற்கு ஸ்பாட் பைன் போட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இதற்காக பாயின்ட் ஆப் சேல் (பிஓஎஸ்) கருவிகளைப் பயன்படுத்தி அபராத தொகையை வசூலித்து வருகின்றனர். இந்த சாதனங்களைப் பயன்படுத்தி சொத்து வரி கூட வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக சுமார் 500 பிஓஎஸ் கருவிகள் வாங்கப்பட்டு மாநகராட்சி அதிகாரிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது, சாலை விதிகளை மீறும் போது போக்குவரத்து காவலர்கள் விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது போல் பல்வேறு குடிமை விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த பணியில், சென்னை மாநகராட்சி பாதுகாப்பு மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள், மண்டல அதிகாரிகள், நிர்வாக மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் சென்னை மாநகராட்சியில் உள்ள வார்டு உதவி பொறியாளர்கள் இந்த இயந்திரங்களைப் பயன்படுத்துவார்கள். இது சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் விதிகளை மீறுபவர்களைப் பிடிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 15 பறக்கும் படை வாகனங்கள் களமிறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் சென்னை மாநகராட்சிக்கு தகுந்த பலன் கிடைத்து வருகிறது. விதிமீறல்களில் ஈடுபடுபவர்களிடம் ஸ்பாட் பைன் வசூல் மூலம் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.1கோடிக்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே நடைபெறும் பல்வேறு வகையான விதிமீறல்களுக்கு உடனுக்குடன் ஸ்பாட் பைன் விதிக்கப்படுவதால் இதுபோன்ற விதிமீறல்கள் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சாலையில் குப்பையை கண்மூடித்தனமாக கொட்டுவது, கழிவுகளை தரம் பிரிக்காதது, சட்டவிரோத கழிவுநீர் வெளியேற்றம் மற்றும் கால்நடைகளை சாலையில் விடுவது உள்ளிட்ட பல்வேறு வகையான விதிமீறல்களுக்கு ஸ்பாட் பைன் வசூலிக்கும் முறையை சென்னை மாநகராட்சி செயல்படுத்தியுள்ளது. இதற்காக பறக்கும்படை வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி மூலம் பொதுமக்கள் அளிக்கும் புகார்களின் அடிப்படையிலும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு செல்கின்றனர். விதிமீறல்களில் ஈடுபடுபவர்களை பிடித்து அவர்களுக்கு ஸ்பாட் பைன் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தொடங்கி ஒரு மாதம் தான் ஆகிறது. தற்போது வரை வசூல் தொகை ரூ.1 கோடியை கடந்து விட்டது. இன்னும் அதிகப்படுத்தும் போது விதிமீறல்கள் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கிறோம். பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் அடிப்படையிலும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post பொது இடங்களில் விதிமீறி குப்பை கொட்டியதாக ரூ.1 கோடி அபராதம் வசூல்: பிஓஎஸ் இயந்திரங்களுடன் களம் இறங்கிய அதிகாரிகள் appeared first on Dinakaran.