மாணவர்கள் அனைவரும் கல்வியில் மட்டுமல்லாமல் சமூகத்திலும் சிறப்பாக விளங்க வேண்டும்: அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை கடைபிடிக்கவும்

புதுக்கோட்டை, நவ. 15: மாணவர்கள் அனைவரும் கல்வியில் மட்டுமல்லாமல் சமூகத்திலும் சிறப்பாக விளங்க வேண்டும் என்று கலெக்டர் அருணா வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் சார்பில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம், நவம்பர்-14 தேசிய குழந்தைகள் தினம், நவம்பர்-19 உலக குழந்தை துன்புறுத்தல் பாதுகாப்பு தினம் மற்றும் நவம்பர்-20 சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியினை, கலெக்டர் அருணா, நேற்று தொடங்கி வைத்தார். இதையொட்டி குழந்தைகள் பாதுகாப்பு கையெழுத்து இயக்கத்தினை கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த அரண் புத்தகம் 1-னை வெளியிட்டு, உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.

அப்போது கலெக்டர் அருணா தெரிவித்ததாவது;
தமிழ்நாடு முதலமைச்சர் குழந்தைகளின் நலனில் மிகுந்த அக்கறைகொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் குழந்தைகளின் கல்வி, சமூக தீர்வுகள் உள்ளிட்டவைகளை தீர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, நவம்பர்-14 தேசிய அளவிலான குழந்தைகள் தினம், நவம்பர்-19 உலக அளவிலான குழந்தை துன்புறுத்தல் பாதுகாப்பு தினம் மற்றும் நவம்பர்-20 சர்வதேச அளவிலான குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை உரிமைகள், குழந்தைகள் தொடர்பான சட்டங்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் இப்பேரணி துவக்கி வைக்கப்பட்டது. இப்பேரணி, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கி, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தினை சென்றடைந்தது.

இப்பேரணியில் ஜெ.ஜெ. செவிலியர் கல்லூரியைச் சேர்ந்த சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவிகள் விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி பேரணியில் கலந்து கொண்டனர். எனவே தமிழக அரசின் உரிய வழிகாட்டி நெறிமுறைகளை மாணவர்கள் அனைவரும் பின்பற்றி கல்வியில் மட்டுமல்லாமல், சமூகத்திலும் சிறப்பாக விளங்கிட வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், உறுதிமொழியினை, மாவட்ட கலெக்டர் அருணா தலைமையில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவிகள் ஏற்றுக்கொண்டனர். உறுதிமொழியான ‘நான் பாதுகாப்பான குழந்தைப் பருவத்திற்காக தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து விதமான குழந்தைநேய செயல்பாடுகளிலும் என்னை ஈடுபடுத்திக் கொள்வேன். குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளான குழந்தைத் திருமணம், இளம் வயது கர்ப்பம், பாலியல் வன்முறை, பள்ளி இடைநின்றல், போதைப்பொருள் பயன்பாடு, குழந்தைத் தொழிலாளர், சமூக ஊடகங்கள் தாக்கம், பாலின வேறுபாடு மற்றும் வேறு எந்தவிதமான குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகள் என் கவனத்திற்கு வந்தாலும் உடனடியாக அக்குழந்தைகளை பாதுகாக்கும் செயலில் ஈடுபடுவேன்.

சாதி மத இன வேறுபாடு இன்றி அனைத்து குழந்தைகளையும் சமத்துவமாக நடத்துவேன். பாலின தேர்வு நிலையற்ற குழந்தைகளுக்கான பாதுகாப்பு சூழலை அனைத்து நிலையிலும் உறுதிசெய்வேன். மாற்றுத்திறன்கொண்ட குழந்தைகளுக்கும், மனவளர்ச்சி குன்றிய, ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கும் அவர்களது அணுகல்களை உறுதி செய்து பாதுகாப்பு மற்றும் பராமரிப்பினை ஏற்படுத்திக்கொடுப்பேன். குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகள் என் கவனத்திற்கு வரும் பட்சத்தில் உடனடியாக 1098, 181 மற்றும் அருகே உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுப்பேன். நம் எதிர்காலத்தில் முதலீடு செய்வது என்பது, நம் குழந்தைகளுக்காக முதலீடு செய்வதாகும் என்பதை உணர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசுடன் ஒருங்கிணைந்து செயலாற்றுவேன் என்று மனதார உறுதியளிக்கிறேன்.

குழந்தைநேய சமூகத்தை இணைந்து உறுவாக்குவோம், உறுதிசெய்வோம்.” என்ற உறுதிமொழியினை, கலெக்டர் அருணா, வாசிக்க அதனை பின்தொடர்ந்து, அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவிகள் ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) பிரியா தேன்மொழி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்.வசந்தகுமார், முதன்மைக் கல்வி அலுவலர் சண்முகம், மற்றும் மாணவிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post மாணவர்கள் அனைவரும் கல்வியில் மட்டுமல்லாமல் சமூகத்திலும் சிறப்பாக விளங்க வேண்டும்: அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை கடைபிடிக்கவும் appeared first on Dinakaran.

Related Stories: