மாணவர்கள் போராட்டம் எதிரொலி; உபி அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு திடீர் ஒத்திவைப்பு

பிரயாக்ராஜ்: மாணவர்களின் போராட்டம் எதிரொலியாக உபி தேர்வாணையம் சார்பில் நடத்தப்படவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மாநில அரசு திடீரென அறிவித்துள்ளது. உபி அரசு துறையில் ஆய்வு அதிகாரி(ஆர்ஓ), உதவி ஆய்வு அதிகாரி(ஏஆர்ஓ) பதவிகளுக்கான தேர்வு வரும் டிசம்பர் 7 மற்றும் 8ம் தேதிகளிலும், சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு டிசம்பர் 22,23 ஆகிய தேதிகளிலும் நடைபெறும் என மாநில அரசு அறிவித்திருந்தது.

அரசின் இந்த முடிவை கண்டித்தும் ஒரே நாளில் தேர்வை நடத்த வலியுறுத்தியும் மாணவர்கள் லக்னோவில் உள்ள உபி அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகம் முன்பு கடந்த 4 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு சமாஜ்வாடி கட்சி ஆதரவு அளித்தது. நேற்றுமுன்தினம் மாணவர்கள் மத்தியில் பேசிய சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஒரே நாடு ஒரே தேர்தல் என்று கூறும் பாஜ அரசால் ஏன் ஒரே நாளில் தேர்வுகளை நடத்த முடியவில்லை என்று கேள்வி கேட்டார்.

மாணவர்கள் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விஷமிகள் ஊடுருவியுள்ளனர் என்று உபி போலீசார் தெரிவித்தனர். மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவை தடுக்கும் நோக்கில் செயல்பட்ட சில விஷமிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக லக்னோ துணை கமிஷனர் அபிஷேக் பார்தி நேற்று தெரிவித்தார். இந்த நிலையில் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு பழைய முறைப்படி நடத்தப்படும் என்று மாநில அரசு நேற்று அறிவித்தது.மேலும் ஆர்ஓ,ஏஆர்ஓ தேர்வுகள் நடத்துவதற்கு குழு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post மாணவர்கள் போராட்டம் எதிரொலி; உபி அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு திடீர் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: