சிறுகதை

நன்றி குங்குமம் தோழி

நாகரீகம்

“எங்களுக்கு பூமாவைத்தான் பிடிச்சிருக்கு”- வரதன் வீடு. கலகலவென்று இருந்த வீடு சட்டென்று அமைதியானது. எங்கும் ஒரு விரும்பத் தகாத மௌனம்.பூமாவின் தந்தை சபேசன் முகத்தில் ஒரு மந்தஹாச புன்னகை. தான் நினைத்தது நடந்துவிட்ட மகிழ்ச்சி. காலைத் தூக்கிப் போட்டு அமர்ந்தார். பவானியின் அப்பா சிவன் தன் முகத்தில் சட்டென்று சூழ்ந்த வேதனையை மறைக்க முயன்றார். சங்கடத்துடன் மகள் பவானியின் முகத்தைப் பார்க்க, அவள் மெதுவாக எழுந்து உள்ளே சென்றாள்.எதுவும் நடக்காதது போல் எழுந்தார்கள் வரதன் வீடு.

“நாங்க வெளியில வெயிட் பண்றோம். யோசித்து பதில் சொன்னா நிச்சயத்தை செஞ்சுகிட்டுப் போறோம். சென்னையிலிருந்து நாங்க அடிக்கடி வர முடியாது”
– அவர்கள் வெளியில் போனார்கள்.

கூடியிருந்த உறவுகள் முகம், முகம் பார்த்தது.“சபேசன் இந்த மாதிரி ஒரு பெண்ணைப் பார்க்க வரும்போது நீ உன் பெண்ணையும் அலங்காரம் செஞ்சு கூட்டிட்டு வந்தது தப்பு”- ஒரு பெரியவர்.
“அதுக்காக என் பொண்ணை எங்கேயும் கூட்டிட்டு வராம இருக்க முடியுமா? அவ தோழியாத்தான் வந்தாள். இப்படிக் கேப்பாங்கன்னு தெரியுமா?”- சபேசன் குரலில் ஏளனம். சின்ன திருப்தி.
“அவங்க கேட்டதுல என்ன தப்பு?”
– பக்கத்து வீட்டு மாமி.

“பையன் பேங்க்ல வேலை செய்யறான். நிறைய படிச்சிருக்கான். சென்னையில இருக்கான். அதுக்கு ஏத்த மாதிரி பொண்ணு வேணும்னு நினைக்கிறது இயல்புதானே.”
அதற்கு யாரும் பதில் சொல்லவில்லை. ஒருத்தர் எண்ணம் போல் எப்போதும் மற்றவர்களுக்கு இருப்பதில்லையே? சுயநலமும், தனக்கு மட்டுமே எல்லாமும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மற்றவர்களைப் பற்றி நினைக்க மாட்டார்கள்.

சபேசன் பக்கத்து வீடுதான். பஞ்சாயத்து யூனியனில் கிளார்க். ஒரே பெண் பூமா. அவளும் பவானியும் ஒன்றாக காலேஜ் வரை படித்தார்கள். சிவனும், சபேசனும் பக்கத்து வீடுதான். நாப்பது வருடப் பழக்கம்.பவானி படித்திருந்தாலும் பதவிசாக இருப்பாள். நறுவிசாக காரியங்கள் செய்வாள். சங்கீதம் கற்றிருக்கிறாள். எட்டு ஊர் மணக்கும்படி சமையல் செய்வாள். அந்த ஊரில் யாருக்கு என்ன உதவி தேவை என்றாலும் கூப்பிடு பவானியைத்தான்.பவானி தேய்த்து விளக்கி வைத்த குத்துவிளக்கு என்றால் பூமா அல்ட்ரா மாடர்ன். பெரிய மஹாலில் எரியும் ஆடம்பர விளக்கு. முதுகு வரை விரித்து விடப்பட்ட கூந்தல். கண்ணுக்குத் தெரியாத பொட்டு. லிப்ஸ்டிக், லெக்கின்ஸ், குர்தா என்று இருப்பாள். தமிழில் பேசுவது அநாகரீகம் என்று நினைப்பவள். எனக்கு அவ்வளவு ஈசியா தமிழ் பேச வராது.

நான் தமிழ்ப் புத்தகங்கள் படித்ததில்லை என்று அலட்டிக் கொள்வாள்.இன்று கூட தோழிப் பெண் என்று வந்து, வரதனும், அவளும் ஆங்கிலத்திலேயேதான் பேசிக் கொண்டிருந்தார்கள். வரதனுக்கு காபி, பஜ்ஜி, கேசரி கொடு என்று அவளைத்தான் ஏவிக் கொண்டிருந்தார் சம்பத். பவானி, அழகாய் சாருகேசியும், மோகனமும் பாடியபோது
கூட அதைக் கவனிக்கவில்லை வரதன். கூடத்தில் அமர்ந்திருந்தவர்களுக்கு அது ஒரு வித்தியாசமாக இருந்தது.

இந்த வரனை முடித்தாக வேண்டும் என்று சிவனும், தன் பெண்ணுக்கு வரதனை ஈர்க்க வேண்டும் என்று சம்பத்தும் உறுதியாக இருந்தார்கள்.அக்ரஹாரத்தில் உள்ள பெரிய சாஸ்திரிகளின் உதவியாளர் சிவன். இரண்டு பெண்கள். தன் மகளுக்கு நல்ல வேலையில் உள்ள மாப்பிள்ளை வேண்டும் என்று விரும்பினார் சிவன்.சம்பத் தன் மகளின் அழகுக்கு ஒரு ராஜகுமாரன் வந்து கொத்திக் கொண்டு போவான் என்று நம்பினார். ஆனால் எந்த ராஜகுமாரனும் வெறும் பெண்ணை மட்டும் கொத்திக் கொண்டு போக விரும்பவில்லை. சிவன் தன் மகளுக்கு வங்கி வேலை பார்க்கும் வரதனைக் கொண்டு வந்ததில் அவருக்குச் சிறிது பொறாமைதான். என்றாலும் அந்த இடத்தில் தன் மகளை நிற்க வைப்பதன் மூலம் வரதன் குடும்பத்தின் பார்வை அவள் மேல் விழாதா என்ற எதிர்பார்ப்புடன்தான் வந்திருந்தார்.

சிவனுக்கு தான்தான் சாஸ்திரி. தன் மகளுக்கானும் மாதச் சம்பளம் வாங்கும் புருஷன் வேண்டும் என்று ஆசை. பவானியை காலேஜ் படிக்க வைத்தார். அடுத்தும் ஒரு பெண். அவளும் பிளஸ்டூ படிக்கிறாள். நகை, பாத்திரம், பண்டம் என்று குருவி மாதிரி சேர்த்து பவானிக்கு அரசு ஊழியர். ஐடி கம்பெனி என்று வரன் பார்த்தார். அதனால்தான் உள்ளூர் பெரிய சாஸ்திரிகளின் மகன் ரங்கன் விரும்பி வந்து பவானியை பெண் கேட்டபோது மறுத்துவிட்டார்.

“ரங்கனும் புரிந்து கொண்டான். பவானியிடம் “அப்பாவின் ஆசை எனக்குப் புரியுது. எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. உன்னை மகிழ்ச்சியா வச்சுக்க விரும்பறேன். அவ்வளவுதான். நீ சௌபாக்கியமா வாழணும்”- என்றவன், தனக்கு கொஞ்ச நாள் போகட்டும் என்று திருமணத்தை தள்ளி வைத்திருக்கிறான்.ரங்கன் சொல்லித்தான் தரகர் வரதனைக் கொண்டு வந்தார்.

தரகர் வந்து வரதன் பற்றிச் சொன்னதும், அஞ்சு பத்து கூடப் போனாலும் பரவாயில்லை என்று முடிவு செய்து விட்டார் சிவன். ஒரே பையன், சென்னையில் சொந்த வீடு இருக்கு. ஒரே பெண். அவளுக்குத் திருமணம் முடிந்துவிட்டது. பிக்கல், பிடுங்கல் இல்லை என்று நினைத்தார் சிவன். பேச்சுவார்த்தை ஒத்து வந்து, பவானியின் படத்தைப் பார்த்து, பிடித்திருக்கிறது என்ற பிறகுதான் பெண் பார்க்க வரச் சொன்னார். ஆனால் இப்போது?

“இங்க பூமா மாதிரி ஒரு பெண்
இருக்கறது எங்களுக்குத் தெரியாதே?”- வரதனின் தாயார்.
“அவ எங்க சொந்தக்காரப் பெண் இல்லை.”

“ஆனா, சொந்தத்தை விட மேல”- சபேசன். ‘‘நாப்பது வருஷம் நட்பு. பக்கத்து பக்கத்து வீடு. பவானியை ஒதுக்கி என் பெண்ணை கட்டி வைக்கணும்னு நான் விரும்பலை. பவானி சம்மதிச்சா, இதைப் பற்றி மேல பேசலாம்”- சபேசன் கள்ளச் சிரிப்புடன் பேசினார்.“அவ சொல்ல என்ன இருக்கு?”
-குடும்பத்தின் மூத்தவர்.

“அவன்தான் பூமாவைப் பிடிச்சிருக்குன்னு சொல்றான். இனி யோசிக்க என்ன இருக்கு. நல்ல இடம். விட வேண்டாம். பவானிக்குன்னு ஒருத்தன் வராமலா இருப்பான்”- அக்ரஹாரத்துப் பெரியவர் ஒருவர்.“ஆனா, இது தப்பு இல்லையா?”
– மெல்லியதாய் ஒரு குரல் கேட்டது.

“எல்லாம் பேசி முடிச்சு, பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டு, அந்தப் பொண்ணு மனசிலேயும் கற்பனையை உண்டு பண்ணிட்டு, இங்க வந்து பூமாவைப்
பிடிச்சிருக்குன்னு சொல்றது அயோக்கியத்
தனம் இல்லையா? அந்தக் குழந்தை மனசு
எவ்வளவு வேதனைப்படும்?”- மாமா ஆதங்கத்துடன் பேசினார்.

“மாமா இதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை”- பவானி வெளியில் வந்தாள்.
“உண்மையில் அந்த ஈசன் என்னைக் காப்பாத்தி இருக்கார். படுகுழியில் விழாம பாதுகாத்திருக்கார். அவருக்கு நான் நன்றி சொல்றேன்.”

“என்னம்மா சொல்றே?”“நான் இப்ப சொல்றது சத்தியமான உண்மை. சுயநலமான, மனிதாபிமானம் இல்லாத ஒரு மனிதன்கிட்டேர்ந்து தப்பித்து இருக்கிறேன். ஒரு இடத்திற்கு எல்லாவற்றுக்கும் சம்மதம் சொல்லி பெண் பார்க்க வந்து விட்டு, இங்கு அழகான ஒரு பெண்ணைப் பார்த்ததும் அவளைத்தான் பிடிச்சிருக்குன்னு சொல்றது எப்படிப்பட்ட குணம்? இப்படி மற்றவர் மனதைப் புண்படுத்தி, தன் ஆசை மட்டுமே முக்கியம் என்று நினைக்கும் மனிதருடன் நான் எப்படி நிம்மதியாக வாழ முடியும்? நிலையான புத்தி இல்லாமல், வெளித்தோற்றத்தில் மயங்கற நப்பாசை மனிதன் எனக்கு எதற்கு.”

“நாளைக்கு பூமாவை விட அழகா, வசதியா இன்னொரு பெண்ணைப் பார்த்தா இவளை வேண்டாம்னு சொல்லிடுவார். இவரைப் பொறுத்தவரை மனைவிங்கறது ஒரு சோஷியல் ஸ்டேட்டஸ். அவ்வளவுதான். மனுஷி இல்லை. நன்றி இறைவா.” சபேசன் முகம் சுருங்கியது.

பவானியின் வார்த்தைகள் எல்லோர் மனதிலும் பதிந்தது.“அப்போ சரி. சபேசன், உன் சம்மதம் முக்கியம். நீ சரின்னா வரதன், பூமாவுக்கு நிச்சயம் செஞ்சிடலாம்.”
அதற்குத்தானே காத்திருந்தார் சபேசன், மகிழ்ச்சியோடு எழுந்தார்.

“ஒரு நிமிஷம்”- பவானி.
“என்ன விஷயம்?”- வீடு.
“எனக்கும், ரங்கனுக்கும் நிச்சயம்
செஞ்சிடுங்க.”

“ரங்கனா? அவன் டிகிரி கூடப்
படிக்கலையேம்மா…”
“எல்லாவற்றிலும் உயர்ந்த படிப்பை அவர் படிச்சிருக்கார். வேதம். ஆமாம். வேத தர்மப்படி வாழுகிறார். மனசு பூரா அன்பை நிரப்பிக் கொண்டு, சௌபாக்கியமாய் வாழுகிறார். உலகத்திற்காக, உலக நலனுக்காக வேதத்தை உச்சரிக்கிறார். பழமையும், கட்டுப்பெட்டித்தனமாக வாழ்வது கேவலம் இல்லை. அது
கௌரவம், கம்பீரம்.”
‘ஆனாலும். . . ’’

“ரங்கனும் ஒண்ணும் குறைஞ்சுடலையே. இங்க ரெண்டு வீடு இருக்கு. இதோ அடுத்த மாதம் லண்டனில் உள்ள ஒரு கோவிலுக்கு முழுப் பொறுப்பு ஏற்றுப் போகிறார். அங்குள்ள கல்லூரி ஒன்றில் வேதங்கள் கற்பிக்கப் போகிறார். இதை விட சிறப்பானவர் எனக்குக் கிடைப்பாரா? நாகரீகம் என்பது படிப்பிலோ, ஆங்கிலம் பேசுவதிலோ, அல்ட்ரா மாடர்ன் ஆடை அணிவதோ இல்லை. பிறர் மனம் புண் படாமல் நடப்பதில் இருக்கிறது”- பவானி புன்னகைத்தாள்.

“இதை விடச் சிறப்பு, அவர் என்னை விட்டு வேறு ஒரு பெண்ணை விரும்பலை. இது இல்லைன்னா, அதுன்னு மரம் தாவலை. இதை விட நாகரீகமானவர் வேறு யார் இருக்கப் போறாங்க?”
வீடு குதூகலித்தது.அப்பா சிங்கமாய்ச் சிலிர்த்து எழுந்தார்.ரங்கனை அழைக்கப் போன அவர் நடையில் கம்பீரம் இருந்தது.

தொகுப்பு: ஜி.ஏ.பிரபா

The post சிறுகதை appeared first on Dinakaran.