ஆன்லைன் வர்த்தகம் செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறி ரூ.96.5 லட்சம் மோசடி செய்த வழக்கில் 6பேர் கைது: சைபர் குற்றப்பிரிவு தகவல்

சென்னை: சர்வதேச பங்குச்சந்தையில் ஆன்லைன் வர்த்தகம் செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறி ரூ.96.5 லட்சம் மோசடி செய்த வழக்கில் 6பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சைபர் குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 21.06.2024ம் தேதி மதுரை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என வாட்ஸ்அப் மூலமாக தொடர்பு கொண்டு ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி ரூ.96,57,953/-ஐ பல்வேறு வங்கி கணக்குகள் மூலமாக பெற்றுக்கொண்டு ஆன்லைன் பணமோசடி செய்த நபர்கள் யாரென்று கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவர் இழந்த பணத்தை மீட்டுத்தருமாறு கொடுத்த புகாரின் பேரில் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க சந்திப்மிட்டல். இகா.ப. காவல்துறை கூடுதல் இயக்குநர். இணையவழி குற்றப்பிரிவு, சென்னை மற்றும் காவல் கண்காணிப்பாளர், இணையவழி குற்றப்பிரிவு III சென்னை ஆகியோரின் உத்தரவின் பேரில் மதுரை மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கருப்பையா அவர்களின் மேற்பார்வையில் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் பிரியா செந்தில்குமார் அவர்களின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, வாதி, எதிரிகளுக்கு பணம் அனுப்பிய பல்வேறு வங்கி கணக்குகளிலிருந்த இருப்பு பணம் ரூ.38.28,000/- முடக்கம் செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேற்படி குற்றச்சம்பவம் தொடர்பாக வாதி, எதிரிகளுக்கு ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதற்காக பணம் அனுப்பிய வங்கி கணக்குகளை பின்தொடர்ந்து புலன் விசாரணை செய்த போது. அதில் ஒரு குறிப்பிட்ட வங்கி கணக்கை மட்டும் பயன்படுத்தி வாதியிடமிருந்து சைபர் குற்றவாளிகள் ரூ.20,00,000/-ஐ ஆன்லைன் பணமோசடி செய்து பெற்று, அந்த பணத்தை திருச்சி ஆழ்வார் தெருவைச் சேர்ந்த சேக்தாவுத் மகன் சீனி முகமது என்ற நபரின் இரு வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதை சீனிமுகமது பணமாக திரும்ப பெற்று வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைத்ததை விசாரணையில் கண்டுபிடித்த தனிப்படையினர்.

மேற்கண்ட சீனி முகமதுவின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்து, அவரை திருச்சி சென்று கைது செய்து விசாரணை செய்ததில், மேற்கண்ட வங்கி கணக்குகளை திருச்சி உறையூரை சேர்ந்த லியாகத் அலி மகன் இப்ராகிம் என்பவரது ஆலோசனையின் பேரில் கமிஷன் பணத்திற்கு ஆசைப்பட்டு திருச்சி தனரத்தின நகரை சேர்ந்த அப்துல் நசீர் மகன்கள் முகமது சபீர் முகமது ரியாஸ், திருச்சி உறையூரைச் சேர்ந்த லியாகத் அலி மகன் முகமது அசாருதீன் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை சக்கரப்பள்ளியை சேர்ந்த முகமது தாஜிதீன் மகன் முகமது மர்ஜீக் ஆகியோருடன் சேர்ந்து மேற்கண்ட குற்றத்தை செய்தது தெரியவந்தது.

மேலும் மேற்கண்ட எதிரிகள் Cash withdrawal செய்த பணத்தினை அவர்களுக்கு வாட்ஸ்ஆப் மெசேஜில் வரும் இரகசிய குறியீடை யார் கொண்டு வருகிறார்களோ அவர்களிடம் அந்த பணத்தினை கொடுத்து அவர்கள் குறிப்பிடும் வங்கி கணக்குகளுக்கு அனுப்பி ஒரு இலட்சம் ரூபாய்க்கு 1000 ரூபாய் கமிஷனாக இதுவரை லட்சக்கணக்கில் பணம் பெற்றள்ளதும் தெரியவந்தது. மேற்படி எதிரிகளை காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் திருச்சி மற்றும் தஞ்சாவூர் சென்று கைது செய்து அவர்களிடமிருந்து குற்றச்செயலுக்கு பயன்படுத்திய செல்போன்கள், சிம்கார்டுகள், வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் ATM கார்டுகள் ஆகியவற்றை கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

மேற்கண்ட எதிரிகள் பல வங்கி கணக்குகளை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் பொதுமக்களிடம் ஆன்லைன் பணமோசடி செய்த பணம் ரூ.1 கோடி வரை பெற்று ஏமாற்றி பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றியுள்ளனர். மேலும், இவர்கள் மேற்குவங்காளம், கர்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்களிலும் கைவரிசை காட்டியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இக்குற்றச்சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் யாரென்று கண்டறிந்து கைது செய்த தனிப்படையினரை காவல்துறை கூடுதல் இயக்குநர் அவர்கள் வெகுவாக பாராட்டியதோடு மற்ற குற்றவாளிகளையும் விரைவில் கைது செய்ய அறிவுறுத்தியுள்ளார்கள். மேலும், இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூடுதல் காவல் இயக்குநர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

பொதுமக்கள் சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகிறது:-

*பொதுமக்கள் இது போன்ற அழைப்புகளை கண்டு அஞ்சாமல் கணினிசார் குற்றப் பிரிவு அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

*இது போன்ற அழைப்புகளை துண்டித்து விட்டு குறிப்பிடப்பட்ட அலுவலகத்தை தொடர்பு கொண்டு அழைப்பவரின் அடையாளத்தை உறுதி செய்யவும்.

*தனிப்பட்ட தகவல்கள் மற்றும் நிதி சார்ந்த தகவல்களை அறிமுகமில்லாத நபர்களிடம் தொலைபேசியில் அளிக்காதீர்கள்.

*மோசடி செய்பவர்கள் நமக்கு யோசிக்க நேரமளிக்காமல் அவசரமான சூழலில் இருப்பதாக நம்ப செய்வர். நம்பகமான நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து செயல்படவும்.

*சைபர் மோசடிகள் மற்றும் அவர்களின் ஏமாற்றுத்தந்திரங்களை தொடர்ந்து அறிந்து வைத்திருங்கள் குற்றம் நடைபெறாமல் தடுக்க விழிப்புடன் இருப்பது முக்கியம்.

*உங்கள் வங்கி மற்றும் கடனட்டை கணக்குகளில் அனுமதிக்கப்படாத பரிவர்த்தனைகள் ஏதும் உள்ளதா என தவறாமல் சரிபார்க்கவும்.

*முக்கியமான கணக்குகளில் இரு காரணி பாதுகாப்பைப் பயன்படுத்தவும்.

*மேலும், பொதுமக்கள் தங்களது வங்கிக்கணக்குகளை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் இது போன்ற கணக்குகள் நிதி மோசடிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. யாரேனும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

நீங்கள் இது போன்ற மோசடிக்கு ஆளாகியிருந்தால், சைபர் கிரைம் கட்டணமில்லா உதவி எண் 1930 ஐ டயல் செய்து சம்பவத்தைப் புகாரளிக்கவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்களது புகாரைப் பதிவு செய்யவும்.

The post ஆன்லைன் வர்த்தகம் செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறி ரூ.96.5 லட்சம் மோசடி செய்த வழக்கில் 6பேர் கைது: சைபர் குற்றப்பிரிவு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: