கோவை: பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இன்று காலை முதலே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கேரளாவில் இருந்து கோவைக்கு இன்று காலை இரண்டு கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் துடியலூரை அடுத்து வெள்ளிக்கிணறு பகுதியில் உள்ள மார்ட்டின் வீட்டில் சோதனையில் இறங்கினர். இதேபோல் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அமைந்துள்ள மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனங்களில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்று இருக்கலாம் என்ற கோணத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் சோதனை நடைபெறும் பகுதிகளில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். கோவையில் மார்ட்டினுக்கு சொந்தமான கல்லூரியிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு மார்ட்டினின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 400 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டன. இது தொடர்பான வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா, சொத்துக்கள் ஏதேனும் முடக்கப்பட்டதா என்பது தொடர்பான தகவல்கள் தற்போது நடைபெற்று வரும் சோதனையின் முடிவில் தான் தெரியவரும்.
The post லாட்டரி மார்ட்டின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை.. ஆவணங்கள் ஏதேனும் கைப்பற்றப்பட்டதா?; சோதனை முடிவில் தெரியும்! appeared first on Dinakaran.