திண்டுக்கல்: கொடைக்கானல் மலையடிவாரத்திலுள்ள 5 சோதனைச் சாவடிகளில் இ-பாஸ் ஸ்கேனிங் செய்யும் பணி துவங்கியது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் நடைமுறை, 5 லிட்டருக்கும் குறைவான பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.20 பசுமை வரி விதிக்கும் நடைமுறை குறித்து, திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி நேற்று பழநி மலைச்சாலை அடிவாரம் அய்யம்புள்ளி சோதனைச்சாவடியில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் தெரிவித்ததாவது: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு மற்றும் வழிகாட்டுதல்களின்படி கொடைக்கானலுக்கு வரும் வெளியூர், உள்ளுர் வாகனங்கள் இ-பாஸ் எடுத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற நடைமுறை கடந்த மே 7ம் தேதி முதல் செயல்பாட்டில் உள்ளது. சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் தங்களின் வாகனங்களுக்கு எளிதில் இ-பாஸ் எடுக்கும் வகையில் க்யூ ஆர் கோடு (QR Code) வழங்கப்பட்டுள்ளது.
இ-பாஸ் ஸ்கேனிங் கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகேயுள்ள டோல்கேட்டில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இங்கு இ-பாஸ் பரிசோதனையின்போது போக்குவரத்து நெரிசல், இணையதள பிரச்னைகளால் புதிதாக இ-பாஸ் வழங்குவது மற்றும் ஸ்கேன் செய்வதில் கூடுதல் கால அவகாசம் ஏற்பட்டது.இதனை கவனத்தில் கொண்டு வெள்ளி நீர்வீழ்ச்சி டோல்கேட்டில் நடைமுறையில் இருந்து வந்த இ-பாஸ் ஸ்கேனிங் செய்யும் பணிகள் கொடைக்கானல் நுழைவாயிலாக உள்ள காமக்காபட்டி, பாலசமுத்திரம் காவல் சோதனை சாவடிகள், தர்மத்துப்பட்டி, வடகாடு, சித்தரேவு வனசோதனை சாவடிகளில் நேற்று முதல் துவங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொடைக்கானல் மலைப்பகுதியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று இ-பாஸ் ஸ்கேன் செய்யும் பணி விரைவாக நடப்பதுடன், போக்குவரத்து நெரிசலும் வெகுவாக குறையும். ஏற்கனவே இ-பாஸ் எடுத்துள்ளவர்களுக்கு ஸ்கேனிங் செய்வதும், இ-பாஸ் இல்லாமல் வரும் வாகனங்களுக்கு உடனடியாக இ-பாஸ் பெற்று ஸ்கேன் செய்து அனுப்புதல் உள்ளிட்ட பணிகள் வெள்ளி நீர்வீழ்ச்சி டோல்கேட் உள்பட இந்த 6 சோதனை சாவடிகளில் நடத்தப்படுகிறது.
இதன்மூலம் சுற்றுலாப்பயணிகள் இ-பாஸ் சரிபார்த்தல் நடைமுறைக்காக காத்திருக்கவோ, வாகன நெரிசலில் கஷ்டப்படவோ தேவையில்லை. கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் எளிதாக இ-பாஸ் எடுத்து செல்வதற்கு ஏதுவாக வழியில் உள்ள முக்கிய உணவகங்கள், விடுதிகள், பெட்ரோல் பங்க், கடைகள், பேருந்து நிறுத்தங்களில் இ-பாஸ் QR Code, இ-பாஸ் இணைய முகவரி மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள், படங்கள் கூடுதலாக அச்சிடப்பட்டு பதாகைகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் இ-பாஸ் நடைமுறைப்படுத்துதல், கண்காணித்தல், நெகிழி இல்லா பசுமை கொடைக்கானல் உருவாக்குவதற்கு தமிழ்நாடு அரசின் வருவாய், ஊரக வளர்ச்சி, மாசு கட்டுப்பாட்டு வாரியம், போக்குவரத்து, வனம், காவல் மற்றும் கொடைக்கானல் நகராட்சி, பண்ணைக்காடு பேரூராட்சி, உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.
The post கொடைக்கானல் மலையடிவாரத்திலுள்ள 5 சோதனைச் சாவடிகளில் இ-பாஸ் ஸ்கேனிங் துவக்கம்: கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.