பின்னர் ஓட்டேரியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது: எவ்வளவு பெரிய மழை வந்தாலும் அதை சமாளிக்கக்கூடிய அளவிற்கு சென்னை மாநகராட்சி அனைத்து நிலையிலும் தயாராக உள்ளது. இதுவரை மழைநீர் தேக்கம் எங்கும் சென்னையில் இல்லை. சிறிய அளவில் தேங்கிய நீரும் அகற்றப்பட்டுவிட்டது. மழையில் ஒரு மரம் விழுந்தது, அதுவும் அகற்றப்பட்டுவிட்டது. சென்னை மாநகராட்சியில் 320 இடங்களில் நிவாரண மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மையத்தில் உணவு சுகாதார வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அத்தனை அடிப்படை வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கு மழை நேரங்களில் உணவு வழங்க 120 சமையல் கூடங்கள் தயார் நிலையில் உள்ளன. தாழ்வான பகுதிகளில் இருக்கக்கூடிய பொதுமக்களை மீட்டு நிவாரண மையத்தில் தங்க வைப்பதற்காக 103 படகுகள் தயார் நிலையில் உள்ளன. இதில் 36 படகுகள் சென்னை மாநகராட்சி சார்பில் வாங்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கணேசபுரம் சுரங்கப்பாதையை தவிர்த்து சென்னையில் இருக்கக்கூடிய அத்தனை சுரங்க பாதைகளிலும் இயல்பான போக்குவரத்து உள்ளது. 100 எச்.பி மோட்டார்கள் 134 தயார் நிலையில் உள்ளன. 426 மோட்டார் பொருத்தப்பட்ட டிராக்டர்கள் தயாராக உள்ளன. மழைக் காலத்தை முன்னிட்டு சென்னையில் 2,193 சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதில் 1.20 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். சென்னை மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப்பணியாளர்கள் என 22 ஆயிரம் பேர் மழைவெள்ள மீட்பு பணிக்காக தயார் நிலையில் உள்ளனர். 18,500 தன்னார்வலர்கள் மழையில் பணியாற்ற பதிவு செய்துள்ளார்கள். ஓட்டேரி நல்லான்கால்வாயில் ஆயிரம் டன் மணல் அகற்றப்பட்டுள்ளது. மீதம் 10 டன் முதல் 15 ஆயிரம் டன் வரை உள்ள மண்ணை அகற்ற வேண்டும். 10 கிமீ வரை மணலை அகற்ற வேண்டும். விருகம்பாக்கம் கால்வாயிலும் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது, அதுவும் முடிந்துவிடும். மக்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது. சென்னை முழுக்க கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
The post வடகிழக்கு பருவ மழையையொட்டி மீட்பு பணிக்கு சென்னை மாநகராட்சியில் 103 படகுகள், 426 மோட்டாருடன் டிராக்டர்கள் தயார்: 22 ஆயிரம் பணியாளர்களுடன் பணிபுரிய 18,500 தன்னார்வலர்களும் பெயர் பதிவு appeared first on Dinakaran.