தெருக்களில் குடியேறிய பொதுமக்கள்

மதுரை: மதுரையில் 3வது நாளாக முல்லை நகர் பகுதி மக்கள் தெருக்களில் குடியேறியபடி தலையில் கருப்பு துண்டு போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை பீபீ குளம் முல்லை நகர், நேதாஜி மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இவை ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறி, நீர்வளத்துறை சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நீர்நிலைகளில் உருவாகும் ஆக்கிரமிப்புகளை ஏற்க முடியாது என ஐகோர்ட் கிளை கூறியுள்ள நிலையில், ராஜாக்கூரில் 106 பேருக்கு வீடுகள் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இருப்பினும் முல்லை நகர் பகுதி மக்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளுக்கு எதிராக தெருக்களில் குடியேறும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இவர்களின் போராட்டம் நேற்று 3வது நாளாக நீடித்தது. இதையொட்டி அவர்கள் தெருக்களில் சமையல் செய்து சாப்பிட்டு தங்கள் போராட்டத்தை தொடர்கின்றனர். இதற்கிடையே நேற்று பலரும் கருப்பு துணிகளால் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு ஒப்பாரி வைத்தும், சிலர் தூக்குக்கயிறை கழுத்தில் மாட்டியபடியும் நூதன முறையில் போராட்டத்தில் பங்கேற்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘தங்கள் வீடுகளை இடிக்கும் நடவடிக்கைக்கு எதிரான போராட்டம் காலவரையின்றி தொடரும்’’ என்றனர்.போராட்டத்தை முன்னிட்டு, இப்பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

The post தெருக்களில் குடியேறிய பொதுமக்கள் appeared first on Dinakaran.

Related Stories: