வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி பதவியேற்க உள்ளார். அவரது அரசு நிர்வாகத்தில் அமைச்சர்கள், உயர் பொறுப்பு வகிக்கக் கூடியவர்கள் தற்போது தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், புதிய அதிபர் டிரம்ப் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘‘அமெரிக்காவின் சிறந்த தேசபக்தர் விவேக் ராமசாமியும், ‘தி கிரேட்’ எலான் மஸ்கும், புதிய அரசு நிர்வாகத்தில் அரசின் செயல்திறன் துறைக்கு தலைமை தாங்குவார்கள் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவர்கள் இருவரும் இணைந்து, அனைத்து அமெரிக்கர்களின் வாழ்க்கையையும் சிறப்பாக செய்யும் வகையில், அரசு நிர்வாகத்தில் வேண்டிய சீர்த்திருத்தங்களை செய்வார்கள்.
குறிப்பாக, ஆண்டுக்கு 6.5 டிரில்லியன் டாலர் (ரூ.546 லட்சம் கோடி) அரசின் செலவினத்தில் மிகப்பெரிய அளவில் நடக்கும் வீண்செலவையும், முறைகேட்டையும் நாங்கள் தடுப்போம். இதற்கு தேவையான விதிகளை தளர்த்துவது, செலவை குறைப்பது, அரசு நிறுவனங்களை மறுகட்டமைப்பது போன்ற பணிகளில் விவேக் ராமசாமி, மஸ்க் கவனம் செலுத்துவார்கள். ‘அமெரிக்காவை காப்போம்’ இயக்கத்திற்கு இது முக்கியமானது. இது நிச்சயம் அரசு பணத்தை வீணடிப்பவர்களுக்கு அதிர்ச்சியை தரும். வரும் 2026ம் ஆண்டு ஜூலை 4 வரை விவேக் ராமசாமி, மஸ்க் பொறுப்பில் இருப்பார்கள்’’ என்றார். டிரம்புக்கு மிகவும் நெருக்கமான விவேக் ராமசாமி (37), கேரளாவின் பாலக்காடு பகுதியை பூர்வீகமாகக் கொண்டவர். இவரும், டெஸ்லா நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் இருவருமே தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் வெற்றிக்காக தீவிரமாக உழைத்தனர். இதனால் தனது நிர்வாகத்தில் இருவருக்கும் முக்கிய பொறுப்பு தரப்படும் என ஏற்கனவே டிரம்ப் கூறியிருந்தார். சொன்னபடியே தற்போது பதவி தந்துள்ளார்.
* பிற பதவிகளில் யார், யார் தேர்வு?
புதிய அரசில் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சராக கிறிஸ்டி நோயம், பாதுகாப்பு அமைச்சராக பேட் ஹெக்சேத், சிஐஏ (மத்திய புலனாய்வு துறை) தலைவராக ஜான் ராட்கிளிப், இஸ்ரேல் தூதராக ஹக்கபே, வெள்ளை மாளிகையின் நீதித்துறை ஆலோசகராக பில் மெக்ஜின்லே, மத்திய கிழக்கின் சிறப்பு தூதராக ஸ்டீபன் விட்காப், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக் வால்ட்ஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
* பைடனை சந்தித்த டிரம்ப்
புதிய அதிபரானதைத் தொடர்ந்து டொனால்டு டிரம்ப் 4 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நேற்று தலைநகர் வாஷிங்டனுக்கு வந்தார். குடியரசு கட்சியினரின் உற்சாக வரவேற்புடன், மீண்டும் வெள்ளை மாளிகைக்கு சென்றார் டிரம்ப். அங்கு, அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசினார். அதிகார பரிமாற்றத்திற்கு முன்பாக இத்தகைய சந்திப்பு நடப்பது வழக்கம்.
The post அமெரிக்க அரசு நிர்வாகத்தை மேம்படுத்த விவேக் ராமசாமி, எலான் மஸ்கிற்கு செயல்திறன் துறை தலைமை பதவி: டிரம்ப் அறிவிப்பு appeared first on Dinakaran.