×
Saravana Stores

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் மதுபாட்டில்களுக்கு பில் வழங்கும் முறை அமல்

சென்னை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் மதுபாட்டில்களுக்கு டிஜிட்டல் முறையில் பில் வழங்குவது நடைமுறைப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு ரசீது வழங்குதல், மதுபாட்டில்களில் பார்கோடு அச்சிட்டு அதன் மூலம் தொடர்ச்சியாக கண்காணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொண்டது.

இதற்காக மென்பொருள் தயாரிக்க ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்துக்கு ₹294 கோடி மதிப்பிலான பணியாணை வழங்கப்பட்டது. தொடர்ந்து டாஸ்மாக் கணினிமயமக்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, அரக்கோணம் மற்றும் ராமநாதபுரத்தில் சில கடைகளில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று முதல் மதுபாட்டில்களுக்கு பில் வழங்குவது நடைமுறைப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது:
ரயில்டெல் நிறுவனம் வழங்கிய மென்பொருளை முதல்கட்டமாக அரக்கோணம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் தலா 7 கடைகளில் சோதனை முறையில் கையடக்க கருவி மூலம் பில் வழங்கி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் திட்டத்தை செயல்படுத்த நிர்வாகம் திட்டமிடப்பட்டது. இதற்காக கடந்த சனிக்கிழமை முதல் டாஸ்மாக் கடை பணியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள 131 கடைகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 89 கடைகளிலும் என மொத்தம் 220 கடைகளில் இன்று முதல் மதுபாட்டில்களுக்கு பில் வழங்கும் முறை செயல்படுத்தப்படவுள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட ஒருங்கிணைப்பு கொண்டு வரப்பட்டு பில் வழங்கப்படுவதுடன் பார்கோடு ஸ்கேனர் வசதியும் கடைகளில் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் மதுபாட்டில்களுக்கு பில் வழங்கும் முறை அமல் appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Kanchipuram, Chengalpattu district ,CHENNAI ,Kanchipuram ,Chengalpattu ,Kanchipuram, ,Dinakaran ,
× RELATED ஊழியர் சஸ்பெண்ட்: டாஸ்மாக் நிர்வாகம் பதில் தர ஆணை