ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு 2 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இங்கு ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ், ஆர்ஜேடி கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. பாஜ கட்சி, அகில இந்திய ஜார்க்கண்ட் மாணவர் அமைப்பு உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளது. ஜார்க்கண்டில் ஆட்சியை தக்க வைக்க ஜேஎம்எம் தலைவரும், முதல்வருமான ஹேமந்த் சோரன், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். இதே போல, பாஜ தரப்பில் பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.
இங்கு, முதல் கட்டமாக 43 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது. இதில், முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன், முன்னாள் எம்பி கீதா கோடா உள்ளிட்ட 683 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 15,344 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்ட பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடந்தது. பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் தேர்தல் நடந்தது. மொத்தம் 1.37 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி, 64.86 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். 2ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 20ம் தேதி நடக்க உள்ளது. அதைத் தொடர்ந்து, வரும் 23ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
வயநாடு இடைத்தேர்தல்:
இதே போல, கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதி மற்றும் பல்வேறு மாநிலங்களில் 31 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நேற்று இடைத்தேர்தல் நடந்தது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து வயநாடு மக்களவை தொகுதி காலியானது. இங்கு, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரியங்கா காந்தி, இடதுசாரி கூட்டணி வேட்பாளர் சத்யன் மொகேரி, பாஜ கூட்டணி வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் உள்பட 16 பேர் போட்டியிட்டனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும், பெரும்பாலான மையங்களில் காலையிலேயே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர். முதல் ஒரு மணி நேரத்தில் 7 சதவீத வாக்குகள் பதிவானது. இறுதி நிலவரப்படி 64.72 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
இங்கு, கடந்த தேர்தலில் 73 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. வாக்கு சதவீதம் குறைந்துள்ளது தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று காங்கிரஸ், இடதுசாரி மற்றும் பாஜ கூட்டணி கட்சியினர் தெரிவித்துள்ளனர். வாக்குப்பதிவை முன்னிட்டு வயநாடு தொகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குப்பதிவு மையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் வலிமையான போராளியாக இருப்பேன்: பிரியங்கா
வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரியங்கா காந்தி நேற்று காலை கல்பெட்டா, வைத்திரி உள்பட பகுதிகளிலுள்ள வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டார்.
அதன் பிறகு அவர் கூறுகையில், ‘‘எனக்கு இங்குள்ள மக்கள் தந்த அன்புக்கு நன்றி செலுத்த வயநாடு வாய்ப்பு தரும் என்று கருதுகிறேன். நான் வெற்றி பெற்றால் நாடாளுமன்றத்தில் வலிமையான போராளியாக இருப்பேன். அதற்கு நான் உறுதி அளிக்கிறேன். நாடாளுமன்றத்தில் இப்போதே வலிமையான எதிர்க்கட்சி உள்ளது. என்னுடைய கொள்கைகளில் இருந்து நான் எப்போதும் பின்வாங்க மாட்டேன். ராகுல் காந்தி பெற்ற வாக்குகளை விட எனக்கு அதிகமாக கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்’’ என்றார்.
வாக்கு சதவீதம் சரிய காரணம்?
கடந்த சில மாதங்களுக்கு முன் வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பூத்துகளில் வாக்குப்பதிவு மிகவும் மந்தமாகவே இருந்தது. சூரல்மலை பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் ஒரு வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த மையத்தில் கடந்த தேர்தலில் ஓட்டு போட்ட 211 பேர் இப்போது இல்லை. இவர்கள் அனைவரும் நிலச்சரிவில் இறந்து விட்டனர். நிலச்சரிவிலிருந்து தப்பிய பலரும் தற்போது முகாம்களிலும், வாடகை வீடுகளிலும் வசித்து வருகின்றனர். இவர்களை ஓட்டு போட அழைத்து வருவதற்காக சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது. ஓட்டு போட வந்த பலரும் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து அழுதது அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.
மே.வங்கத்தில் வன்முறை
மேற்கு வங்க மாநிலத்தில் தல்டன்கிரா, ஹரோயா, மெதினிபூர், சிதாய், மதரிஹத், நய்ஹதி ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளில் நேற்று இடைத்தேர்தல் நடந்தது. இதில் பல இடங்களில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜ தொண்டர்கள் இடையே மோதல் சம்பவங்கள் நடந்தது. குறிப்பாக, நய்ஹதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு நடந்த கடும் வன்முறையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர் அசோக் ஷா படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் அறிக்கை தர உத்தரவிட்டுள்ளது. 6 தொகுதியில் சராசரியாக 70 சதவீத வாக்குகள் பதிவாகின. தல்டன்கிராவில் அதிகபட்சமாக 75.20 சதவீத வாக்குகள் பதிவாகின.
The post 43 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் ஜார்க்கண்டில் 65% வாக்குப்பதிவு: வயநாட்டில் வாக்கு சதவீதம் குறைந்தது appeared first on Dinakaran.