×

செஞ்சூரியனில் இன்று இரவு தென்ஆப்ரிக்கா -இந்தியா 3வது டி.20 போட்டியில் மோதல்: முன்னிலை பெறப்போவது யார்?

செஞ்சூரியன்: இந்தியா-தென்ஆப்ரிக்கா இடையே 4 போட்டி கொண்ட டி.20 தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியாவும், 2வது போட்டியில் தென்ஆப்ரிக்காவும் வெற்றிபெற்றன. இதனால் 1-1 என தொடர் சமனில் இருக்க 3வது போட்டி இன்று இரவு 8.30 மணிக்கு செஞ்சூரியன் மைதானத்தில் தொடங்கி நடக்கிறது. முதல் போட்டியில் பேட்டிங்கில் மிரட்டிய இந்தியா 200ரன்னுக்கும் மேல் குவித்த நிலையில் 2வது போட்டியில் 124 ரன்தான் எடுக்க முடிந்தது. அதிரடி வீரர் அபிஷேக் சர்மா, திலக்வர்மா, கேப்டன் சூர்யகுமார், ரிங்குசிங் 2 போட்டியிலும் எதிர்பார்த்த ரன் அடிக்கவில்லை.

தென்ஆப்ரிக்காவின் வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி வருகின்றனர். பவுலிங்கில் வருண்சக்ரவர்த்தி மிரட்டி வருகிறார். 2வது போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு இருந்த நிலையில் கடைசி 3 ஓவரில் சொதப்பலான பவுலிங்கால் வெற்றியை கோட்டை விட்டது. இன்று வெற்றி பெற்று முன்னிலை ஏற்படுத்தும் முனைப்பில் இந்தியா களம் இறங்குகிறது. மறுபுறம் மார்க்ரம் தலைமையிலான தென்ஆப்ரிக்கா அணி முதல் போட்டியில் தோல்வி அடைந்தாலும் 2வது போட்டியில் வெற்றி பெற்றது அந்த அணிக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. பேட்டிங்கில் கிளாசென், டேவிட் மில்லர், மார்க்ரம் என இதுவரை யாரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை. டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 2வது போட்டியில் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.

பவுலிங்கில் ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகராஜ், மார்கோ ஜான்சன் இந்திய அணிக்கு நெருக்கடி அளித்து வருகின்றனர். சொந்த மண்ணில் தொடரை கைப்பற்ற வேண்டுமெனில் இன்றைய போட்டியில் வெற்றி முக்கியமானதாகும். இரு அணிகளும் இதற்கு முன் 29 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் இந்தியா 16, தென்ஆப்ரிக்கா 12ல் வென்றுள்ளன. ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது. இன்று 30வது முறையாக மோத உள்ளன. செஞ்சூரியன் மைதானத்தில் தென்ஆப்ரிக்கா 14 டி.20 போட்டிகளில் ஆடி 6ல் வெற்றி, 8 தோல்வி அடைந்துள்ளது. இந்தியா இங்கு 2018ல் ஒரே ஒரு போட்டியில் தென்ஆப்ரிக்காவுடன் மோதி தோல்வி கண்டுள்ளது.

The post செஞ்சூரியனில் இன்று இரவு தென்ஆப்ரிக்கா -இந்தியா 3வது டி.20 போட்டியில் மோதல்: முன்னிலை பெறப்போவது யார்? appeared first on Dinakaran.

Tags : South Africa ,India ,T20 ,Centurion ,Dinakaran ,
× RELATED உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்...