இந்த கூட்டத்தில், தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு பேசியதாவது:
தமிழ்நாடு அரசு காற்று மற்றும் நீர்மின் திட்டங்களில் தனியார் துறை முதலீட்டை ஊக்குவிக்க ”தமிழ்நாடு காற்றாலை திட்டங்களுக்கான மறுசக்தியளித்தல், புதுப்பித்தல் மற்றும் ஆயுள் நீட்டிப்புக் கொள்கை 2024, தமிழ்நாடு நீர்மின் சேமிப்பு கொள்கை 2024 மற்றும் ”சிறிய நீர்மின் திட்ட கொள்கை” ஆகியவற்றை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் கடலோர பகுதியில் 35 ஜிகாவாட் அளவுக்கு கடல் காற்றின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய இயலும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடலோர காற்றாலை மின்சாரத்தை வெளியேற்றுவதற்காக கடலோர துணை மின்நிலையம் மற்றும் அதனுடன் தொடர்புடைய கடல் கேபிள் மற்றும் மின் பரிமாற்ற கம்பிகள் தமிழகத்திற்குள் மட்டுமே அமைக்கப்பட உள்ளது. இதற்காக ஒரு கூட்டு செயற்குழு அமைக்கப்பட வேண்டும்.
2029-30 ஆம் ஆண்டுக்குள் 75,300 மெகாவாட் பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அம்மோனியா தொழில்துறை மின்சுமைகள் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ளது. மத்திய மின் பரிமாற்ற பயன்பாட்டு நிறுவனம் இந்தியா லிமிடெட் மின்சார சட்டத்திற்கு முரணாக, மாநில மின் விநியோக நிறுவனங்களின் ஒப்புதல் இல்லாமலேயே, அந்த உற்பத்தியாளர்களுக்கு நேரடியாக பொது வலையமைப்பு அணுகலை வழங்கி வருகிறது.
2030ம் ஆண்டில் தொழில்துறை நுகர்வோரின் மதிப்பிடப்பட்ட மின் பரிமாற்ற கட்டண பொறுப்பு ஆண்டுக்கு ரூ.42,270 கோடியாக இருக்கும், இது 25 ஆண்டுகளுக்கு அல்லது அதற்கு மேலாகத் தொடரும். தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத்தின் தொடர் கூடுதல் மின் பரிமாற்ற கட்டண பொறுப்பு ஆண்டுக்கு ரூ.3,114 கோடியாக இருக்கும். எனவே, மின்சார சட்டம் 2003-ன் விதிகளின்படி, உற்பத்தியாளர்களுக்கான மின் பரிமாற்ற கட்டண விலக்கு திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும், அத்தகைய நுகர்வோருக்கு பொது வலையமைப்பு அணுகல் வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
The post மின்சார சட்ட விதிகளின் படி உற்பத்தியாளர்களுக்கான மின் பரிமாற்ற கட்டண விலக்கு திரும்ப பெற வேண்டும்: புதுடெல்லி எரிசக்தித்துறை மாநாட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜி வலியுறுத்தல் appeared first on Dinakaran.