போலியாக வரைவோலை தயாரித்து ரூ.1.47 கோடி மோசடி: 2 பேர் கைது

ஆவடி: செங்குன்றம், பைபாஸ் சாலை, நேதாஜி தெருவில் உள்ள் எச்.டி.எப்.சி. வங்கியில் டெரிக் லோஸ்லி (45) என்பவர் கிளை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஜூலை மாதம் ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், செங்குன்றம், அண்ணா தெருவைச் சேர்ந்த சந்துரு என்பவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம், அவரது வங்கி கணக்கில் ரூ.1.47 கோடிக்கான எஸ்.பி.ஐ. வங்கியின் டி.டி. (வரைவோலை) தாக்கல் செய்தார். அந்த டி.டி.யை எச்.டி.எப்.சி. மயிலாப்பூர் கிளைக்கு அனுப்பி சரி பார்த்தபோது, அதில் சந்தேகம் எழுந்தது. விசாரணையில் அது போலியான டி.டி என தெரிந்தது. போலியான டி.டி.யை வங்கியில் தாக்கல் செய்து ஏமாற்றிய சந்துரு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இதுகுறித்து விசாரித்த போலி ஆவண தடுப்புப்பிரிவு போலீசார் தலைமறைவாக இருந்த சந்துரு (55) மற்றும் கொளத்தூர், ஜெயராம் நகரைச் சேர்ந்த குணசேகரன் (59) ஆகிய இருவரையும் கைது செய்தனர். சந்துரு, குணசேகரன் ஆகிய இருவரும் நண்பர்கள். சந்துரு ரயில்வேயில் ஒப்பந்த பணிகளை எடுத்து செய்து வருகிறார். அப்போது, தொழிலை விரிவுபடுத்த கடன் பெற்றுத் தருமாறு சந்துரு, குணசேகரனிடம் கேட்டுள்ளார். அதன்படி, குணசேகரன், தமிழ்நாடு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட டி.டி.யை, சந்துரு பெயரில் போலியாக தயாரித்து கொடுத்துள்ளார். அதை வங்கியில் டெபாசிட் செய்யும்போது சந்துரு சிக்கியது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர். இதில் சந்துரு முன்னாள் பாமக நகரச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post போலியாக வரைவோலை தயாரித்து ரூ.1.47 கோடி மோசடி: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: