சென்னை தலைமை செயலகத்தில் முதல்வருடன் வணிகர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு: கோவையில் தங்கநகை தொழில் பூங்கா அமைத்ததற்கு நன்றி தெரிவித்தனர்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து கோவையில் தங்கநகை தொழில் பூங்கா அமைத்தற்காக வணிகர் சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர். சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா மற்றும் நிர்வாகிகள் நேற்று சந்தித்து கோயம்புத்தூர் தங்கநகை தொழில் பூங்கா அமைத்ததற்காக நன்றி தெரிவித்தனர்.

அப்போது மாநிலப் பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜுலு, சென்னை ஜுவல்லரி அசோசியேஷன் தலைவர் ஜெயந்திலால் சலானி, பொதுச்செயலாளர் எஸ்.சாந்தகுமார், தமிழ்நாடு தங்கநகை வியாபாரிகள் சங்கத் தலைவர் பி.சபரிநாதன், செயற்குழு நிர்வாகி எஸ்.கிருஷ்ணகுமார், தமிழ்நாடு தங்கநகை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் பி.முத்து வெங்கட்ராமன், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் என்.ஜெகதீசன், செயலாளர் எஸ்.ஸ்ரீதர், மாநில துணைத்தலைவர் தனுஷ்கோடி, தமிழ்நாடு தங்க நகை அடகு பிடிப்போர் சங்க செயல் தலைவர் எஸ்.ஆர்.வெங்கடேசலு, பொருளாளர் பி.ஸ்ரீராமகுமார் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: கார்ப்பரேட் நிறுவனங்கள் லூலூ மால், டி மார்ட், அமேசான் போன்றவை சில்லரை வணிகத்தை முழுமையாக அழித்து விடும் முன் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுத்து இந்திய பாரம்பரிய வணிகம் தொடர்ந்து நடைபெற நடவடிக்கை எடுத்திட வேண்டும். வளர்ந்து வரும் பெருநகர்களில் உருவாக்கப்படும் மெட்ரோ ரயில் திட்டங்களால் பாதிக்கப்படும் வணிகர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கிட நடவடிக்கை வேண்டும்.

தமிழகம் முழுவதும் நகராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை உரிய வழிகாட்டுதல்கள் மூலம் வரைமுறை செய்து, அரசுக்கு வருவாய் ஈட்டிடவும், நீதி மன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளுக்கு உரிய தீர்வு காணவும், உரிய சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். மாதாந்திர மின் கட்டண நடைமுறையை பின்பற்றிட உரிய நடவடிக்கை வேண்டும்.

நகராட்சி, மாநகராட்சி மார்க்கெட் பகுதிகளில் சிறு, சிறு கடைகளை வைத்து வணிகம் செய்யும் வணிகர்களுக்கு, அந்த இடங்களை வளர்ச்சி திட்டங்களுக்கு உள்ளாக்குகின்ற போது, மீண்டும் அதே இடத்தில் ஏற்கனவே வணிகம் செய்யும் வணிகர்களுக்கு இன்றைய தேதிக்கு ஏற்ப வாடகை உயர்வு செய்து திருப்பி அளித்திட வேண்டும். சொத்துவரி ரசீதை வணிக உரிமத்திற்கு கட்டாயமாக்கும் நடைமுறையை உடனடியாக தவிர்த்திட வேண்டும்.

மக்கள் பெருக்கம் மற்றும் போக்குவரத்து நெருக்கடி கருதி பெருநகரங்கள் மற்றும் நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகள், மொத்த விற்பனை மையங்கள் போன்றவற்றை புறநகர்களில் அமைத்துக்கொள்ள அரசு நிலங்கள் இருப்பின் அதனை அடையாளம் கண்டு ஒதுக்கீடு செய்து, சாலை வசதி, குடிநீர், கழிப்பறை, போக்குவரத்து வசதிகளுடன் மார்க்கெட்டுகளை உருவாக்கிட அவ்விடங்களை மேம்படுத்தி, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் வணிகர்களுக்கு அனுமதி அளித்திடவும் வேண்டும்.

இரவுநேரக் கடைகளுக்கு உரிய அரசாணை பிறப்பித்திருந்தும் பல்வேறு இடங்களில் குறிப்பாக கடலூர், தூத்துக்குடி, நெல்லை போன்ற மாவட்டங்களில் இரவு 10 மணிக்கு மேல் திறந்திருக்கும் வணிக கடைகளில் காவல்துறை அத்துமீறல் இருப்பதை கவனத்தில் கொண்டு, உரிய வழிகாட்டுதல்களை அளித்திட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

 

The post சென்னை தலைமை செயலகத்தில் முதல்வருடன் வணிகர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு: கோவையில் தங்கநகை தொழில் பூங்கா அமைத்ததற்கு நன்றி தெரிவித்தனர் appeared first on Dinakaran.

Related Stories: