தர்மபுரி சிப்காட் பூங்காவுக்கு ஒன்றிய சுற்றுச்சூழல் அனுமதி: விரைவில் நிறுவனங்களுக்கு நிலங்கள் ஒதுக்கீடு

தர்மபுரி: தர்மபுரியில், சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்துள்ளது. விரைவில் நிறுவனங்களுக்கு நிலங்கள் ஒதுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய தர்மபுரி மாவட்டத்தில் போதிய வேலை வாய்ப்பு இல்லாததால், சுமார் 3 லட்சம் மக்கள், கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் திருப்பூர், கோவை, கரூர் போன்ற இடங்களுக்கு வேலைக்கு சென்றுள்ளனர்.

எனவே தர்மபுரியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என மக்கள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அறிவித்தது. நல்லம்பள்ளி ஒன்றியத்தில் 1,733 ஏக்கர் இடம் தேர்வு செய்து சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க தமிழக அரசின் ஆணை வழங்கப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொழிற்பூங்காவில் ஓலா எலக்ட்ரிக் பைக் கம்பெனி உள்ளிட்ட 9 கம்பெனிகள், தொழிற்சாலைகள் அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் சில கம்பெனிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், சிப்காட்டில் தொழில் நிறுவனங்கள் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு, ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம், தமிழக அரசு சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது. அதன்படி ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம், தர்மபுரி சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதியை நேற்று முன்தினம் அளித்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்துள்ளதால் விரைவில் தொழிற்சாலைகள் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்யப்படும்,’ என்றனர். இந்த தொழிற்பூங்கா தொடங்கினால் 18,300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் வெளிமாநிலம், வெளி மாவட்டங்களில் வேலை செய்யும் தர்மபுரி மாவட்ட இளைஞர்கள், சொந்த மாவட்டத்தில் வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

The post தர்மபுரி சிப்காட் பூங்காவுக்கு ஒன்றிய சுற்றுச்சூழல் அனுமதி: விரைவில் நிறுவனங்களுக்கு நிலங்கள் ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Related Stories: