×

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: மீண்டும் ஆக்கிரமித்தால் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை

சேலம்: சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணி இன்று நடந்தது. மீண்டும் ஆக்கிரமித்தால் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இந்த பேருந்து நிலையத்தில் மூன்று பிளார்ட்பார்ம் உள்ளது. இந்த பிளார்ட்பாமில் மாநகராட்சி சார்பில் கடைகள் வாடகைக்கு விடப் பட்டுள்ளது. அவ்வாறு 151 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. ஆனால் பேருந்து நிலையம் முழுவதும் கடைகள் அதிகளவில் உள்ளது எனவும் இதனால் பயணிகள் உட்காருவதற்கு கூட இடம் இல்லாமல் இருப்பதாகவும் புகார்கள் வந்தவண்ணம் இருந்தது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கடைகளை அவ்வப்போது அகற்றியும் வந்தனர்.

ஆனால் அகற்றப்பட்ட கடைகளை மீண்டும் அங்கேயே வைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வந்தது. இந்த நிலையில் இன்று காலை மாநகராட்சி கமிஷனர் ரஞ்ஜீத்சிங் தலைமையிலான அதிகாரிகள் புதிய பேருந்து நிலையத்திற்கு சென்றனர். அங்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகளை அகற்ற தீவிரமாக நடவடிக்கை எடுத்தனர். அப்போது கடைகள் ஒதுக்கப்பட்ட இடத்தை விட்டு அதிகமாக ஆக்கிரமிப்பு செய்து பொருட்கள் கடைக்கு வெளியே வைக்கப் பட்டிருந்தது. அந்த பொருட்கள் அனைத்தும் அங்கிருந்து அகற்றப்பட்டது.

மேலும் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டிருந்த கடைகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. கடைகளில் சிலிண்டர் வைக்க அனுமதி கிடையாது. அதனையும் மீறி கடைகளில் வைத்திருந்த சிலிண்டர்களையும் அதிகாரிகள் அகற்றினர். இதுகுறித்து கமிஷனர் ரஞ்ஜீத்சிங் கூறுகையில், புதிய பேருந்து நிலையத்தில் அதிகளவில் கடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனைதொடர்ந்து அங்குள்ள ஆக்கிரமிப்பு கடைகள் அனைத்தும் இன்று அகற்றப்பட்டது. கொடுக்கப்பட்ட இடத்தை விட்டு மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் சம்பந்தப்பட்ட கடைக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு அதன் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்.

அதிகாரிகளை நியமித்து தொடர்ந்து கண்காணிக்க உள்ளோம் என்றார். தொடர்ந்து ஒவ்வொரு கடையாக சென்று கமிஷனர் ஆய்வு செய்தார். அதேசமயம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கதிரவன் தலைமையில் கடைகளில் உள்ள காலாவதியான பொருட்களை சேகரிக்கும் பணியும் நடந்தது. இந்த ஆக்கிரமிப்பின் போது மாநகராட்சி துணை கமிஷனர் பாலசுப்பிரமணி, சூரமங்கலம் செயற்பொறியாளர் திலகா, மாநகர் நல அலுவலர் முரளி சங்கர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப் பட்டிருந்தது. இதனால் புதிய பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

The post சேலம் புதிய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: மீண்டும் ஆக்கிரமித்தால் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Salem New Bus Stand ,Salem ,Salem New Bus Station ,Dinakaran ,
× RELATED சிறுவனின் மூச்சுக்குழாயில் சிக்கிய குண்டூசி