ராய்ப்பூர்: குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடம் இருந்து பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு விடுக்கப்பட்ட தொடர்ச்சியான கொலை மிரட்டல்களைத் தொடர்ந்து, தற்போது மற்றொரு பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கும் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது. மும்பை, பாந்த்ரா காவல் நிலையத்துக்கு வந்த தொலைபேசி அழைப்பில், ஷாருக்கானை கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாகவும், இதைத் தடுக்க ரூ. 50 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டது. தொடர்ந்து, பாந்த்ரா காவல் நிலையத்தில் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த போன் அழைப்பு சட்டீஸ்கர் மாநிலம், ராய்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஃபைசான் கான் என்பவரின் தொலைபேசி எண்ணில் இருந்து வந்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில், அவரது தொலைபேசி கடந்த வாரம் தொலைந்துவிட்டதாகவும், ஏற்கெனவே இதுதொடர்பாக கமர்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் ஃபைசான் கான் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் வழக்கறிஞர் ஃபைசான் கானை மும்பை காவல் துறையினர் தேடிவந்த நிலையில், இன்று அதிகாலை ராய்ப்பூரில் உள்ள அவரது வீட்டில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
The post ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த சட்டீஸ்கர் வக்கீல் கைது: மும்பை போலீஸ் அதிரடி appeared first on Dinakaran.