×

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் தாட்கோ மூலம் கல்வி உதவித்தொகை

*கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்

திருவண்ணாமலை : திருண்ணாமலையில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், தாட்கோ மூலம் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்டங்களை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடந்தது. அதில், டிஆர்ஓ ராமபிரதீபன், தாட்கோ மாவட்ட மேலாளர் ஏழுமலை உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், சுய தொழில் கடனுதவி, வேலைவாய்ப்பு, அரசு நலத்திட்டங்கள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 459 பேர் மனு அளித்தனர். அதன்மீது, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

மேலும், கலெக்டர் அலுவலகத்தின் தரைதளத்தில் மனு அளிக்க காத்திருந்த மாற்றுத்திறனாளிகளிடம் நேரில் சென்று கலெக்டர் மனுக்களை பெற்றுக்கொண்டார். அவர்களுக்கு தேவைான உதவிகளை விரைந்து வழங்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து, கட்டணமின்றி மனுக்கள் எழுதித்தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதையும், தாயுடன் வரும் குழந்தைகளுக்கு பால் வழங்கும் சிறப்பு ஏற்பாடுகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.

அதைத்தொடர்ந்து, தாட்கோ மூலம் தூய்மை பணியாளர் நல வாரியத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற்ற பணியாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு கல்வி உதவித் தொகையை கலெக்டர் வழங்கினார். அதன்படி, 10ம் வகுப்பு படித்துவரும் மாணவிக்கு ரூ.1000 மற்றும் பிளஸ் 2 படித்துவரும் மாணவிக்கு ரூ.1500 வழங்கப்பட்டது. மேலும், திருமண உதவித்தொகைக்கான காசோலையை 3 நபர்களுக்கு கலெக்டர் வழங்கினார்.

தீக்குளிக்க முயன்ற விவசாயி

இந்நிலையில், தன்னுடைய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்கக்கோரி, கலசபாக்கம் தாலுகா காம்பட்டு எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த விவசாயி மன்னார்சாமி(60) என்பவர் மனு அளிக்க வந்திருந்தார். அப்போது, திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு பிளாஸ்டிக் பாட்டிலில் மறைத்து கொண்டுவந்த மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

உடனடியாக, அங்கிருந்த போலீசார் விரைந்துச் சென்று, அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். பின்னர், அவரிடம் இருந்து கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு, தீக்குளிக்க முயற்சிப்பது சட்டப்படி குற்றம் என எச்சரித்து அனுப்பினர்.

The post திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் தாட்கோ மூலம் கல்வி உதவித்தொகை appeared first on Dinakaran.

Tags : TADCO ,People's Grievance Meeting ,Tiruvannamalai ,Collectorate ,Collector ,Bhaskara Pandian ,Collector Bhaskara Pandian ,Tiruvannamalai Collector's Office ,Collector Bhaskarapandian ,Dinakaran ,
× RELATED அரியலூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 305 மனுக்கள் வருகை