×

பாஜவுடன் மீண்டும் கூட்டணி அமைக்கப்படுமா..? அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மழுப்பல் பதில்

சென்னை: பாஜவுடன் மீண்டும் கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் ஆகியோர் மழுப்பலாக பதில் அளித்தனர். அதிமுகவின் ‘கள ஆய்வு குழு’ கூட்டம் நேற்று சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டம் முடிந்த பிறகு அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமியிடம், நிருபர்கள், ‘கள ஆய்வு குழு கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கே.பி.முனுசாமி, ‘அது ரகசியம், அதுபற்றி சொல்ல முடியாது’ என்றார். மீண்டும் பாஜவுடன் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறீர்களா?’ என்ற கேட்டபோது, ‘இந்த நிகழ்ச்சி பற்றி கேள்வி கேட்டீர்கள். அதற்கு பதில் சொல்லிவிட்டேன்’ என்று மழுப்பலாக கூறிவிட்டு, பாஜ பற்றி பதில் அளிக்காமல் சென்றார். வழக்கமாக பாஜ பற்றி கே.பி.முனுசாமியுடன் கேள்வி கேட்டால், தடாலடியாக பதில் அளித்து வந்தார். ஆனால் நேற்று அப்படி எதுவும் கூறாமல் நழுவி விட்டார்.

இதைத்தொடர்ந்து அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:
பாஜவுடன் அதிமுக மறைமுக கூட்டணி வைத்திருப்பது போன்று பத்திரிகைகளும், ஊடகங்களும் தெரிவிக்கின்றன. அது முற்றிலும் தவறு. இப்போதும் சொல்கிறோம், இதே அதிமுக தலைமை அலுவலகத்தில்தான், பாஜவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டு, முடிவு அறிவிக்கப்பட்டது. அந்த முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை. அந்த நிலைப்பாட்டில் 2026ம் ஆண்டு தேர்தலிலும் சரி, எந்த காலத்திலும் சரி அந்த நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்பதுதான் அதிமுகவின் முடிவு. அன்று எடுத்த முடிவில் உறுதியாக இப்போதும் இருக்கிறோம். மறைமுக கூட்டணி என்பதே கிடையாது.

தெளிவாக சொல்கிறோம், ஒட்டுமொத்தமாக கட்சி எடுத்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இதைத்தான் பொதுச்செயலாளர் எடப்பாடியும் நேற்று முன்தினம் தெளிவாக சொல்லி இருக்கிறார். அதை சிலர் திசைதிருப்பி, இன்று ஊடகத்தில் விவாத பொருளாக மாற்றி இருக்கிறார்கள். அது உண்மை அல்ல. பாஜ-வை தவிர்த்து, மற்ற கட்சிகள் ஒத்த கருத்தோடு அதிமுக கூட்டணிக்கு வந்தால் பொதுச்செயலாரும், கட்சியும் முடிவு செய்யும். இந்த நிலைப்பாட்டை தான் எடப்பாடி சொன்னார். இதை திசை திருப்பி, மாற்றி, விவாத பொருளாக்கி, அதன்மூலம் ஆதாயம் தேடும் முயற்சி என்று சொன்னால் நிச்சயமாக தமிழ்நாட்டு மக்கள் நம்ப மாட்டார்கள். நிச்சயமாக பாஜவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. எந்த காலத்திலும் இல்லை. அந்த நிலைப்பாடு இப்போதும் தொடருகிறது, எதிர்காலத்திலும் தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post பாஜவுடன் மீண்டும் கூட்டணி அமைக்கப்படுமா..? அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மழுப்பல் பதில் appeared first on Dinakaran.

Tags : BJP ,AIADMK ,ministers ,CHENNAI ,KP Munuswamy ,Jayakumar ,Study ,Committee ,Rayapetta, Chennai ,Dinakaran ,
× RELATED சென்னையில் அனுமதியின்றி போராட்டம் அதிமுக, பாஜவினர் கைது