×

சென்னையில் நடந்த சர்வதேச செஸ்: மாஸ்டர்ஸ் சாம்பியன் அரவிந்த்; சேலஞ்சர்ஸ் சாம்பியன் பிரணவ்

சென்னை: கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 2வது தொடரில் தமிழ்நாட்டு வீரர் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். மற்றொரு தமிழ்நாட்டு வீரர் பிரணவ், முதல் சேலஞ்சர்ஸ் சாம்பியன் ஆகியுள்ளார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (எஸ்டிஏடி) சார்பில் சென்னையில் நடந்த கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 2வது தொடர் நேற்றுடன் முடிந்தது. மொத்தம் 7 நாட்கள், 7 சுற்றுகளாக நடந்த போட்டியில் , அர்ஜூன் எரிகேசி (இந்தியா), லெவோன் அரோனியன் (அமெரிக்கா), (பிரான்ஸ்), விதித் குஜராத்தி (இந்தியா), பர்ஹம் மகசூட்லு (ஈரான்), அலெக்சி சரணா (செர்பியா), செய்யது அமின் தபதபாய் (ஈரான்), அரவிந்த் சிதம்பரம் (இந்தியா) ஆகிய முன்னணி வீரர்கள் பங்கேற்றனர்.

இந்தப் போட்டியின் கடைசி இடத்தில் இருந்த தமிழ்நாட்டு வீரர் அரவிந்த் சிதம்பரம், யாரும் எதிர்பாராத விதமாக அசத்தலாக விளையாடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அவர் முதல் சுற்றில் ஈரான் வீரர் அமின் தபதபாய், 2வது சுற்றில் பிரான்ஸ் வீரர் மக்சிமே வாச்சியர் லக்ரவ், 3வது சுற்றில் இந்திய வீரர் விதித் குஜராத்தி, 4வது சுற்றில் அமெரிக்க வீரர் லெவோன் அரோனியன், 5வது சுற்றில் அலெக்சி சரணா ஆகியோருடன் தொடர்ந்து டிரா செய்தார். அதனால், 5 போட்டிகளிலும், தலா 0.5 புள்ளிகள் வீதம், மொத்தம் 2.5 புள்ளிகளுடன், முதல் இடத்தில் இருந்த இந்திய வீரர் அர்ஜூன் எரிகேசியை எதிர்கொண்டார். அதில் அர்ஜூனை வீழ்த்தி முதல் வெற்றியை அரவிந்த் பதிவு செய்தார்.தொடர்ந்து நேற்று நடந்த கடைசி மற்றும் 7வது சுற்றில் மற்றொரு ஈரான் வீரர் பர்ஹம் மகசூட்லு வீழ்த்தி வெற்றி பெற்றார்.

கடைசி 2 சுற்றுகளில் தலா ஒரு புள்ளியை முழுமையாக பெற்ற அரவிந்த் 4.5 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்ததுடன் சாம்பியன் பட்டமும் வென்றார். அதனால் அவருக்கு, 24.5 தரவரிசைப் புள்ளிகள் கிடைக்கும்.இந்தப் போட்டியில் வென்றதன் மூலம், அரவிந்த் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுகிறார். இப்போட்டியுடன் முதல் முறையாக, கிராண்ட் மாஸ்டர்கள் பங்கேற்ற சேலஞ்சர்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியும் நடந்தது. இந்தப் போட்டியில் தமிழ்நாட்டு வீரரான பிரணவ் வெங்கடேஷ், 5.5 புள்ளிகளுடன் முதல் இடத்தை பெற்று சேலஞ்சர்ஸ் தொடரின் முதல் சாம்பியனாகவும் தேர்வானார். வெற்றி பெற்றவர்களுக்கு சாம்பியன் கோப்பையையும், ரொக்கப்பரிசுக்கான காசோலையையும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

The post சென்னையில் நடந்த சர்வதேச செஸ்: மாஸ்டர்ஸ் சாம்பியன் அரவிந்த்; சேலஞ்சர்ஸ் சாம்பியன் பிரணவ் appeared first on Dinakaran.

Tags : International Chess ,Chennai ,Arvind ,Challengers ,Pranav ,Arvind Chidambaram ,Grand Masters Chess Championship ,Tamil Nadu ,Tamil Nadu Sports Development Authority ,STAD ,Masters ,Dinakaran ,
× RELATED நெஞ்சு பொறுக்குதில்லையே இசையை வெளியிட்ட திருமாவளவன்