நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்பின் வெற்றி பல உலக நாடுகளை பதற வைத்துள்ள அதே சமயம், அமெரிக்க ஆண்களின் தலையில் பெரும் இடியை இறக்கி உள்ளது. டிரம்பின் வெற்றியால் ஆத்திரமடைந்த அமெரிக்க பெண்கள் ‘4பி’ புரட்சியை கையிலெடுக்க, ‘இனி டேட்டிங்கும் கிடையாது, டச்சிங்கும் கிடையாது’ என தடாலடியாக அறிவித்திருப்பது ஆண்களை மிரள வைத்துள்ளது. அமெரிக்காவில் பெண்களுக்கு கருக்கலைப்பு உரிமை இருந்தது. ‘கருக்கலைப்பு என்பது பெண்களின் தனிப்பட்ட உரிமை, அது அரசியலமைப்பு உரிமை’ என 50 ஆண்டுக்கு முன் அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இந்த தீர்ப்பை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் 2022ல் கருக்கலைப்பு உரிமையை அதே உச்ச நீதிமன்றம் தடை செய்தது. இந்த பாதகமான தீர்ப்பை வழங்கிய அமர்வில் இருந்த நீதிபதிகளில் 3 பேர் அதிபர் டிரம்பால் நியமிக்கப்பட்டவர்கள். பெண் எதிர்ப்பால் பெரும்பாலான மாகாணங்களில் இந்த தீர்ப்பு அமல்படுத்தப்படாமல் உள்ளது. மீண்டும் டிரம்ப் அதிபரானால், நாடு முழுவதும் கருக்கலைப்பு தடை சட்டம் அமல்படுத்தப்படும் என பெண்கள் மத்தியில் அச்சம் இருந்தது. இதனால், டிரம்ப் மீண்டும் வரக்கூடாது என அமெரிக்க பெண்களில் பலரும் அவருக்கு எதிராக வாக்களித்தனர். ஆனால், ஆணாதிக்கம் நிறைந்த அமெரிக்காவில் ஒரு பெண்ணைத் தவிர வேறு யார் வேண்டுமானாலும் அதிபராகலாம் என்கிற மனநிலையில் உள்ள அமெரிக்க ஆண்கள், கமலா ஹாரிசை வீழ்த்துவதற்காக, டிரம்புக்கு வாக்களித்தனர். இறுதியில் ஆண்கள் வென்றனர்.
இதனால் வெறுப்படைந்துள்ள பெண்கள், தென் கொரியா பாணியில் ‘4பி’ புரட்சியை கையில் எடுத்துள்ளனர். 4பி என்பது 2017-18ல் தென் கொரிய பெண்கள் மத்தியில் ஏற்பட்ட ‘மகத்தான’ மாற்றத்திற்கான புரட்சி. பி என்றால் தென் கொரிய மொழியில் ‘இல்லை’ என்று அர்த்தம். அதன்படி, உடலுறவு, டேட்டிங், திருமணம், குழந்தை பெறுதல் ஆகிய 4 விஷயத்திற்கும் நோ சொல்வது. தற்போது அமெரிக்காவிலும் ஆண்களுக்கு எதிராக இந்த ஆயுதத்தை பெண்கள் எடுத்துள்ளனர். டிரம்ப் வெற்றிக்குப் பிறகு சமூக ஊடகங்களில் இதுபோன்ற பதிவுகள் பெருகிக் கொண்டிருக்கின்றன. பல பெண்களும் 4பியை தீவிரமாக்கும் நேரம் வந்து விட்டதாக குரல் கொடுக்கின்றனர். 4பி மூலம் டேட்டிங், டச்சிங்கிற்கு தடா விதித்து ஆண்களுக்கு சரியான பதிலடி தர வேண்டுமென தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இது அமெரிக்க ஆண்களை கலக்கமடைய வைத்துள்ளது. 4பி புரட்சியால் தென் கொரியாவில் ஓரினச் சேர்க்கை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
The post இனி ஜாலிக்கு இல்லை ஜோலி டிரம்பின் வெற்றியால் ஆண்கள் தலையில் இடி: ‘4பி’ புரட்சியில் அமெரிக்க பெண்கள் appeared first on Dinakaran.