மாதவரம்: ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து கஞ்சா விற்ற ஜிம் மாஸ்டர், இன்ஜினியர் உட்பட 8 பேரை கைது செய்த போலீசார் 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சென்னையில் போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன் அடிப்படையில் கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் கொடுங்கையூர் எம்ஆர் நகர் வடிவுடையம்மன் கோவில் தெரு, மீனாட்சி தெரு சந்திப்பு அருகே சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்களிடம் சுமார் 4 கிலோ கஞ்சா மற்றும் 100 மில்லி கஞ்சா ஆயில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து 3 பேரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், கொடுங்கையூர் வடிவுடையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தினேஷ் பாபு என்ற பாபு (33), காமராஜர் சாலையைச் சேர்ந்த சாய் சரண் (30) மற்றும் பாடிகுமரன் நகரைச் சேர்ந்த தனுஷ் (20) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதில் தினேஷ்பாபு ஜிம் மாஸ்டராக வேலை செய்து வந்ததும், சாய் சரண் இன்ஜினியரிங் முடித்துவிட்டு வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. ஜிம் மாஸ்டர் தினேஷ் பாபுவுக்கு கடன் சுமை அதிகமாக இருந்ததால் அவர் அடிக்கடி தனுஷிடம் கஞ்சா உள்ளிட்ட பொருட்களை வாங்கி தனது நண்பர்களான சாய் சரண் உள்ளிட்ட பலருக்கும் விற்பனை செய்து வந்துள்ளார். இவர்கள் 3 பேரிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் கொடுங்கையூர் போலீசார் ஓட்டேரி திருவிக தெருவைச் சேர்ந்த ராஜேஷ் (38), வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷாம்சன் தேவகுமார் (27), பிரசன்னா (25), திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்த சுபின்ராஜ் (34), மூலக்கடை பகுதியைச் சேர்ந்த ஷாம் பிரசாத் (26) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து 17 கிலோ கஞ்சா வெவ்வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் மீது 2 கொலை வழக்குகள் உள்ளன. இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட தனுஷ் என்பவரிடமிருந்து கஞ்சாவை வாங்கி அதனை ஷாம்சன், பிரசன்னா, சுபின் ராஜ் உள்ளிட்டோருக்கு விற்றுள்ளார். இவர்கள் ஒரு கும்பலாக கஞ்சா வியாபாரத்தை செய்துள்ளனர்.
குறிப்பாக தனுஷ் என்பவர் ஆந்திராவைச் சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி ஒருவரிடம் அடிக்கடி விசாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்துள்ளார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட 8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களிடமிருந்து மொத்தம் கிரீன் கஞ்சா எனப்படும் உயர்ரக கஞ்சா 4 கிலோ உட்பட 21 கிலோ கஞ்சா மற்றும் 100 மில்லி கஞ்சா ஆயில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
The post ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து கஞ்சா விற்ற ஜிம் மாஸ்டர் உட்பட 8 பேர் சிக்கினர்: 21 கிலோ பறிமுதல் appeared first on Dinakaran.