திருவொற்றியூரில் வாயு கசிவு விவகாரம் பள்ளியில் வளர்க்கப்படும் முயல்கள்தான் காரணமா? உடனே அகற்ற உத்தரவு, மாணவிகளிடம் விசாரணை

துரைப்பாக்கம்: சென்னை திருவொற்றியூரில் தனியார் பள்ளியில் வாயுகசிவால் மாணவிகள் மயக்கமடைந்த விவகாரத்தில், பள்ளியில் வளர்க்கப்படும் முயல்கள்தான் காரணமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் அந்த முயல்களை உடனே பள்ளியிலிருந்து வெளியேற்ற ஆர்டிஓ உத்தரவிடுள்ளார். மேலும் துர்நாற்றம் வீசும் பொருட்களை வைத்திருந்திருந்தார்களா என்ற கோணத்தில் மாணவிகளிடமும் விசாரணை நடக்கிறது. திருவொற்றியூர் கிராமத் தெருவில் உள்ள விக்டரி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் விஷவாயு கசிவு காரணமாக கடந்த மாதம் 42 மாணவிகளிக்கு மூச்சு திணறல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

இதனால் அறிவிக்கப்பட்ட தொடர் விடுமுறைக்குப் பின், கடந்த 4ம் தேதி மீண்டும் பள்ளி திறக்கப்பட்டபோது, 2வது முறையாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு 9 மாணவிகள் பாதிக்கப்பட்டனர். அடுத்தடுத்து இருமுறை, வாயு கசிவால் மாணவிகள் பாதிக்கப்பட்டதால் மறுஅறிவிப்பு வரும் வரை பள்ளி செயல்படாது என அரசு அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நவீன எந்திரங்களைக்கொண்டு பள்ளி வளாகத்தில் காற்று தரம் குறித்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் இந்த வாயு கசிவுக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.

இதனிடையே 10, 11, 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பள்ளியில் ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளியை திறக்க வேண்டும் என்று ஒரு தரப்பு பெற்றோர்கள் பள்ளி நிர்வாகம் மற்றும் வருவாய்த் துறையிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனையடுத்து பள்ளியை திறப்பது குறித்து அதிகாரிகள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரிடயே நேற்று ஆலோசனைக் கூட்டம் திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.

மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு முன்னிலையில், வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி வாசுதேவன், திருவொற்றியூர் தாசில்தார் சகாயராணி, திருவொற்றியூர் மண்டல உதவி ஆணையர் ரமேஷ் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் பள்ளியில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் பல தரப்பட்ட விளக்கங்களைக் கேட்டனர்.

அப்போது பள்ளியில் விஷவாயு கசிவதற்கான வாய்ப்பு இல்லை என்று நிர்வாகம் தரப்பில் தெரிவித்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெற்றோர்களுடன் ஆலோசனை செய்து பள்ளியை திறப்பது குறித்து நடவடிக்கை எடுப்பது என தீர்மானிக்கப்பட்டது. இதனிடையே பள்ளியில் 35 முயல்கள் வளர்க்கப்படுவதாகவும், இதன் மூலம் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்து அவற்றை பள்ளியில் இருந்து அகற்ற வேண்டும் என்று ஆர்டிஓ பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

பள்ளியில் விஷவாயு கசிவுக்கான வாய்ப்பு இல்லை என அனைத்துத்துறை அதிகாரிகளும் தெரிவித்தநிலையில் பள்ளியில் மாணவிகள் துர்நாற்றம் வீசும் பொருட்களை வைத்திருந்திருந்தார்களா, அதனால் அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதா என்பதையும் கண்டறிய பள்ளியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் சம்பவத்தன்று பதிவான காட்சிகளை வைத்து 15க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post திருவொற்றியூரில் வாயு கசிவு விவகாரம் பள்ளியில் வளர்க்கப்படும் முயல்கள்தான் காரணமா? உடனே அகற்ற உத்தரவு, மாணவிகளிடம் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: